“பேரன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டங்களில் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இயற்கைவளம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு உரிமை களுக்காக பல உக்கிரமான போராட்டங்களில் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், ஆற்று மணல் கொள்ளை, ஏழு தமிழர் விடுதலை, என். எல். சி எமன், நீட் எமன், தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழ் வழிபாட்டு உரிமை உட்பட தமிழீழத்தின் விடுதலை மற்றும் செம்மரம் வெட்டச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட இருபது தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், அவனியாபுரத்தில் நாங்கள் நடத்திய அறவழிப் போராட்டம் முதற்கொண்டு ஐநா சபைக்கு நேரில் சென்று நீதி கேட்டு நடத்திய அறிவாயுதப் போராட்டம் வரை தமிழர்களின் உரிமை மீட்க இடைவிடாது போராடி வந்திருக்கிறோம். அரசியல் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எங்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய, மாநிலத்தை ஆளும் அதிகார சக்திகள் தங்களின் சுயநலத்திற்காக ஈவு இரக்கமின்றி தொடர்ந்து வேரறுக்கின்றன. எனவே அதே அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கின்ற உரிமைகளை காக்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் எங்களோடு ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) உரிமைக்காக “தைப்புரட்சி” போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் உடன் நின்ற மாணவர்கள், இளைஞர் களோடு இணைந்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 2019 – ஆம் ஆண்டு ,பிப்ரவரி 24-ஆம் நாள், தமிழ்ப் பேரரசு கட்சியை பிரகடனப்படுத்தினோம்.
இந்நிலையில் இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தில் கடந்த 06.09.2019 அன்று முதல் “தமிழ்ப் பேரரசு கட்சியினை” பதிவு செய்ய நாங்கள் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக கடந்த 25.06.2020 அன்று எங்களது கட்சியினை பதிவு செய்து (பதிவு எண்: 56/261/2019-20/PPS-1) தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான உறுதி கடிதத்தையும் அனுப்பி வைத்தது. இந்நேரத்தில் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எங்களின் மனம் நிறைந்த நன்றியினை டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் நின்றபடி கையசைத்து “இதோ உங்களை காக்க வருகிறோம்” என்று கழிவிரக்கத்தோடு கூறிக்கொண்டு கட்சி ஆரம்பித்த, ஆரம்பிக்க போகின்றவர்கள் மத்தியில், மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காகப் போராடி பல நேரங்களில் ரத்தம் சிந்தி அதிகார வர்க்கங்களால் எங்கள் மீது போடப்பட்ட அத்தனை பொய் வழக்குகளையும் சுமந்து சிறையில் அடைக்கப்பட்டும், இவை எதனாலும் புல்லின் நுனியளவு கூட சிதையாமல் மன உறுதியோடு மீண்டு வந்து அறம் மிகுந்த அடங்காப் பற்றோடு எங்கள் மக்களுக்கான கட்சியாக தமிழ்ப் பேரரசு கட்சியினை கட்டமைத்திருக்கிறோம்.
“சொல்லுக்கு முன் செயல்” என்பதே எங்களின் தாரக மந்திரம். எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, எதையும் செயலாக செய்து முடித்து தீர்வு காண்பதே எங்களின் லட்சியம். தைப் புரட்சியில் போராடி வெற்றி கண்ட நாங்கள் அரசியல் களத்திலும் வெற்றி பெற்று அரசு அதிகாரத்தையும் உறுதியாக கைப்பற்றுவோம்.
உலகின் தொன்மையான இனத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்கள். ஆனால் இன்று எமது நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிலம் மலடாக்கப்பட்டிருக்கிறது. எங்கள் விவசாயிகள் வாழ வழியின்றி தொடர்ந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் நித்தம் நித்தம் கொல்லப்படுகிறார்கள். எங்கள் மாணவர்களின் கல்வி, சமூகநீதி, உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்திய அதிகார வர்க்கம் ஒரு பக்கம் எங்கள் வான் புகழ் வள்ளுவனையும், இப்பூமிப் பந்தின் ஆதி மொழியான எங்கள் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடிக் கொண்டே, மற்றொரு புறம் அதற்கு நேர்மாறாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் வலிந்து திணிப்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. பழந்தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாட்டு, உரிமைகளோடு அவ்வப்போது கிடைக்கின்ற தொல்லியல் ஆய்வுகளும் அதற்குரிய சான்றுகளும் சதி செய்து, திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. காடு, மலை, விவசாய விளைநிலங்கள் உட்பட எங்களின் எல்லா இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. மேலும் கொள்ளையிட திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்த அறமற்ற அத்துமீறல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் தமிழ்ப் பேரரசாக தலை நிமிர்ந்தோம்.
நீண்ட நெடுங்காலமாக எங்களோடு வாழும் பிற மொழியினரை தாயன்போடு அரவணைத்துக் கொண்டு, சாதி மத வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை படைக்கும் உறுதியோடு தமிழர் அறத்தின்படி எங்கள் அரசியல் பயணத்தை தொடர்கிறோம். விழுந்து கிடக்கும் நாங்கள் எழுவதும் எங்கள் மண்ணை இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான நாங்கள் ஆள்வதும் எங்களது மரபுரிமை என்பதை அனைவரும் அறிவர் என நம்புகிறோம். மாறாக மீண்டும் மீண்டும் எவரேனும் சிதைக்க நினைத்தால் அவர்கள் தமிழராகவே இருந்தாலும் கூட நாங்கள் கைக்கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்பதையும் இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென்கிழக்காசிய நாடுகள் முழுவதையும் கட்டி அரசாண்ட எங்களின் மாமன்னர்கள் ராசராச சோழன், ராசேந்திர சோழனின் பேரரசையும் பெரும் வரலாற்றையும் நினைவு படுத்துகிற ஒரு தலைநிமிர்வு அடையாளமாகவே தமிழ்ப் பேரரசு கட்சி என பெயர் சூட்டி இருக்கிறோம். தமிழினத்தின் வரலாற்று சிறப்புமிக்க சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களான வில் அம்பு, புலி, மீன் ஆகியவற்றை மைய இலச்சினையாகவும் புரட்சியைக் குறிக்கும் சிவப்பு, வீரத்தை குறிக்கும் மஞ்சள், பசுமையை குறிக்கும் பச்சை கடலையும் ,வானத்தையும் குறிக்கும் நீலம் உள்ளிட்ட வட்டங்களை. கொள்கையின் அடையாளமாகவும் கொண்டு தமிழ்ப் பேரரசு கொடியினை வடிவமைத்திருக்கிறோம்.
தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் விரைவில் அதற்கான பொறுப்பு பட்டியல் வெளியிடப்படும். கொரோனா காலம் முடிந்ததும் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்டி அழகான நாள் ஒன்றை முடிவு செய்து, தமிழ் இனத்தின் வரலாற்று சிறப்புமிக்க நகரம் ஒன்றில் மிக பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படும். அம்மாநாட்டில் நாங்கள் இறுதி செய்து வைத்திருக்கிற உயர்ந்த உன்னதமான தமிழ்ப் பேரரசு கட்சியின் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய ஆவணத்தை பிரகடனப்படுத்த உள்ளோம்.
முன்னாள் நீதியரசர்கள், கல்லூரி துணை வேந்தர்கள், புலமை மிகுந்த தமிழ்ப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆளுமைமிக்க முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தமிழினத்தின் மீது பற்று கொண்டு உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழ் ஆளுமைகள் அனைவரின் வழிகாட்டுதலின்படியே மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாமல் மனிதம் காக்கும் மக்கள் திரளோடு தமிழ்ப் பேரரசு கட்சி நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே வருகிறது. காலமும் இயற்கையும் தமிழ் நிலத்தை எங்களிடம் கையளிக்கக்கூடிய காலம் கட்டாயம் வரும். அறப்படியும், மரபுப்படியும், தமிழர் உரிமை மீட்டு மண்ணுரிமை காத்து அனைத்து உயிர்களுக்குமான காப்பரணாக தமிழ் நாட்டினை தமிழ்ப் பேரரசு கட்சி ஆளும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம். வெல்வோம்.
பேரன்போடு,
வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,