ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்கள் நலத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் கவுரவ் பன்சால் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அவரிடம் இதுபோன்ற அற்பமான மனுவை எங்களிடம் கொண்டுவராதீர்கள் என்று கடிந்துகொண்ட நீதிபதிகள் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். வழக்கறிஞர் கவுரவ் பன்சால் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
”கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் இருக்கும் ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மத்திய கல்வித்துறை அமைச்சகமும், ஐஐடி கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்காக நலத்திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும். கான்பூர் ஐஐடி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தற்கொலைகளுக்கான காரணத்தை ஆய்வு செய்துவருகிறது. இதுவரை அந்தக் குழுவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆதலால், நாட்டில் உள்ள 13 ஐஐடிகளிலும் மனநலப் பாதுகாப்புச் சட்டம் 2017ன் கீழ், பிரிவு 29-ன்படி, மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க நலத்திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும். மாணவர் தற்கொலையைத் தடுக்க தனியாக இலவச தொலைபேசி எண், செல்போன் வழங்கிட வேண்டும்”. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாரிமன் மனுதாரரிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அரசு விழிப்புடன் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நீங்கள் தாக்கல் செய்த இந்த மனு அப்பட்டமான அற்பமானது. உங்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கலாம் என்று நீங்களே கூறுங்கள். இதுபோன்ற அற்பமான மனுவால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கிறோம்” என உத்தரவிட்டார்.