திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் மருத்துவ உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஆரம்பக் கட்டத்தில் சித்த மருந்தான கபசுரக் குடிநீர் வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்காக அனைவருக்கும் தரப்பட்டது. பிறகு வைரஸ் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் மிதமான அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் அலோபதி மருந்துகளோடு சித்த மருந்துகளும் தரப்பட்டன. சித்த மருந்துகள் சிறப்பாகச் செயல்பட்டு வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதை அறிந்த பிறகு சித்த மருத்துவத்துக்கு என்றே “கோவிட் சிறப்பு சித்த மருத்துவ மையங்கள்” ஏற்படுத்தப்பட்டன. இந்த மையங்களில் சித்த மருந்துகளும் பாரம்பரிய உணவுகளும் நோய் அணுகா நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்சியர் ம.ப.சிவன்அருள் ஆலோசனையின்படியும் வழிகாட்டுதலின்படியும் நாட்றாம்பள்ளி அருகில் அக்ரகாரம் தொழில்நுட்பக் கல்லூரியில் 16.07.2020 அன்று கோவிட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதுவரை இந்த மையத்தில் 487 கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் 426 பேர் சிகிச்சை முடிந்து மீண்டும் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். இங்கு சேர்க்கப்படுவோருக்கு ஐந்து நாட்கள் சித்த மருந்துகள் தரப்படுகின்றன. பிறகு தொற்று உள்ளதா எனப் பரிசோதிக்கப்படுகின்றது. பெரும்பாலானோர் ஐந்து நாள் சிகிச்சையிலேயே தொற்றில் இருந்து விடுபட்டு உள்ளனர். மிகச் சிலருக்கே ஐந்து நாட்களுக்குப் பிறகு மேலும் ஐந்து நாள் சிகிச்சை தொடரந்து தரப்படுகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன்அருள் ”மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளும் சிகிச்சையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவம் மூலம் குணமடைந்து செல்வோர் அனைவருமே சிகிச்சை சிறப்பாக இருந்தது எனவும் இது சிகிச்சையாக இல்லாமல் ஆரோக்கிய மேம்பாட்டு பயுற்சியாக இருந்தது என்றும் கூறுகின்றனர்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்படும் மருத்துவமனைசார் முன்னோட்ட சிகிச்சைகளுக்கான பதிவுமையத்தின் (CTRI) ஒப்புதலோடு கோவிட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 20 தொற்றுள்ள நபர்களில் 19 நபர்களுக்கு 5 நாட்களிலேயே மீள் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. ஒரு நபருக்கு மட்டும் 7 நாட்களில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இரத்த மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் உள்ளன. இரத்த தட்டணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பொதுவாக நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளது. இந்த முடிவுகள் முறைப்படி வெளியாகும்போது சித்த மருத்துவம் குறித்து உலகைத் திரும்பிப் பார்க்கும் விதமாக அமையும் என்று ஆட்சியர் சிவன் அருள் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சுசி கண்ணம்மா ”மையத்தின் அருகிலேயே கிடைக்கின்ற வேப்பிலை, நொச்சி, துளசி, கற்பூரவள்ளி ஆகியவற்றைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி வேதி பிடிக்க வைக்கின்றோம். ஓமப் பொட்டணத்தை முகர வைக்கின்றோம். தரமான சித்த மருத்துவ முறைகளால் நோயாளி என்ற உணர்வே இங்கு இருப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை” என்கிறார். கோவிட்-19 சித்த மருத்துவ மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.விக்ரம் குமார்,” இந்த மையத்தை மருத்துவமனை போன்று இல்லாமல் இயற்கை சூழ்ந்த இடமாக வைத்துள்ளோம். 40 மூலிகைகள் கொண்ட தோட்டம், நடை பயிலும் இடம், விசாலமான அறைகள் என அமைத்துள்ளோம். பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கும். தொலைக்காட்சியும் உண்டு. நிலாச்சோறு உண்ண வெளியில் சமூக இடைவெளியோடு மணல் திண்டுகள் உள்ளன. பாரம்பரிய முறையில் மண்பானை சமையல்தான் நடக்கின்றது,” என்கிறார்.

வேலூரில் உள்ள ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் பாரம்பரிய சித்த மருத்துவக் குடிநீர் தயாரித்தல், சமையல் ஆகியன இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மையத்தின் டாக்டர் பாஸ்கரன் ”இங்கு சேர்க்கப்படுவோருக்கு மூலிகை முகக்கவசம் வழங்குகின்றோம். இது வாசனை உணர்வைத் தூண்டுகின்றது. சுவாசப் பாதையில் பிரச்சினை இருந்தால் அதைக் குறைகின்றது,’ என்கிறார். ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் பாரம்பரிய வைத்தியர்கள் ப.ராஜா, வெங்கடேசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கஷாயங்களையும் குடிநீர்களையும் பாரம்பரிய முறைப்படி தயாரித்து வழங்கி வருகின்றனர். மன அழுத்தத்தைப் போக்க இங்கு இருக்கும் தொற்றுள்ளோர் ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை நூல்களைப் படிப்பதற்காக நூலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னிரவு நேரங்களில் திரைப்படப் பாடல்களுக்கு தெரிந்த அளவில் நடனமாடுதலும் நடைபெறுகின்றது. யோகப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

மனம் ஒடுங்கி அறைக்குள் முடங்கி விடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் டாக்டர் விக்ரம் குமார் செய்து வருகின்றார். இங்கு சேர்ந்து 10 நாட்கள் சிகிச்சை முடிந்து திரும்பும் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜரத்தினம் “5 நாட்களிலேயே எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனால் பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்ததால் மேலும் 5 நாட்கள் சிகிச்சை அளித்தார்கள். பத்தாவது நாளில் எடுத்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் இன்று நான் வீடு திரும்புகின்றேன். மூச்சுப் பிரச்சனை இருக்கும்போது வெற்றிலையில் மருந்து வைத்து தந்தார்கள். சுவாசம் சீராகி விட்டது. சித்த மருத்துவத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது”, என்கின்றார். தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் தனது தனித்தன்மையை இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிரூபித்து வருகின்றது. இனி இதை மக்களின் மருத்துவ முறையாக மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது.