தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மனித உடலுக்குத் தீங்கையும், சுற்றுச் சூழலுக்கு மாசையும் ஏற்படுத்தி வந்ததால் அதனை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி மக்களால் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2018, மே 22ல் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில்காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி சம்பவம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்றப் புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மெச்சத்தக்கது. மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள புதிய தமிழக அரசு வேந்தாந்தா நிறுவனத்தின் ஸ்டெல்லைட் ஆலையை தூத்துக்குடியை விட்டு நிரந்தரமாக வெளியேற்றவும், சுற்றுச்சூழல் சட்டங்கள் பலவற்றை மீறியதற்கும், பித்தலாட்டம் பல நிகழ்த்தியதற்கும் வேதாந்தாவின் நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், 2018ஆம் ஆண்டு திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி, படுகொலை செய்த காவல்துறையினரை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது போடப்பட்ட எஞ்சிய வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி