சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தேன் வகைகளில் சர்க்கரைக் கரைசலை கலந்து விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் கிடைத்தது. தற்போதைய சிக்கல் மிகுந்த கொவிட்-19 காலகட்டத்தில் இவ்வாறு செய்வது நமது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இதைத் தீவிர கவனத்தில் எடுத்துக்கொண்ட நுகர்வோர் விவகாரங்கள் துறை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-இன் 19(2) பிரிவின் படி, ஆரம்ப கட்ட ஆய்வுக்குப் பிறகு, உணவு ஒழுங்குமுறையாளரான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையத்தின் கவனத்துக்கு உரிய நடவடிக்கைக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனுப்பியது. மேலும், இது தொடர்பான விசாரணையிலும், நடவடிக்கைகளிலும் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு, நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எடுத்துள்ளது.