சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளை மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கு வழங்கினார்கள். அந்த வழியில், மாண்புமிகு அம்மாவின் அரசும் இன்றைக்கு பல்வேறு துறை களில் வளர்ச்சி கண்டு, நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. வெற்றிநடை போடும் தமிழகத்திற்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழ்நாடு காவல் துறை என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பறியது. எனவேதான், காவல் துறையினருக்கு மாண்புமிகு அம்மா அவர்களும், அவரைத் தொடர்ந்து என் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அம்மாவின் அரசும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர் அவர்கள் காவலர் வீட்டுவசதி வாரியத்தைத் துவக்கி காவலர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுத்தாகள்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காவலர் முழு உடல் பரிசோதனைத் திட்டம், உங்கள் சொந்த இல்லத் திட்டம். தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கினார்கள். பெண் காவலர்களுக்கு பேறுகால விடுப்பை உயர்த்தினார்கள். மேலும், காவலர்களின் உடல்நலம் மட்டும் பாதுகாக்கப்பட்டால் போதாது என்று எண்ணி, என் தலைமையில் அமைக்கப்பட்ட மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்தியாவிற்கே முன்னோடியாக காவலர் நிறைவான பயிற்சி என்ற மனநலம் காக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
அதேபோல, காவல் துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேலும், இன்றைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள காவல் துறை நவீனப்படுத்தப் பட்டுள்ளது. காவல் ஆளிநர்களின் மிகைநேரப் பணிகளுக்கான மதிப்பூதியம் 200 ரூபாயிலிருயது 500 ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாக நிரப்பப்பட்டு, காவல் துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்றென்றும் துணை நிற்கும் என்பதை இந்த நல்ல வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே நுழைகின்றபோது, ஒரு கிராமத்திலே நுழைந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற எண்ணம் இந்த அரங்கத்திற்குள் நுழைந்ததும் எனது மனதில் தோன்றியது. இன்று கிராமத்தில் எப்படி பொங்கல் திருவிழாவை குடும்பத்தோடு கொண்டாடினால் மகிழ்ச்சியோடு இருப்போமோ அதைப்போல இங்கே அரங்கிற்குள் இருக்கின்ற காவலர்கள் குடும்பத்தோடு இந்தத் திருவிழாவை கொண்டாடுகின்ற போது, எனக்கு கிராமம் தான் நினைவிற்கு வருகிறது. தை பிறயதால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். நமக்கெல்லாம் அந்தத் தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும் என்ற இனிப்பான செய்தியை இயத நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரங்கத்தினுள் நுழைகின்றபோது, இங்கே காவலர் குடும்பத்தோடு பொங்கல் வைக்கின்ற காட்சி, அதற்குப் பிறகு, போட்டிகள், அதற்குப் பிறகு கிராமச் சூழ்நிலையில் எப்படி இருக்குமோ அதைப்போல ஆடு, பசுமாடு, மாட்டு வண்டி, கிணறு, அருகில் இயற்கை அழகு நிறையத ஒரு குடிசை. தமிழக கிராமங்களில் எப்படி இந்தத் திருவிழாவை கொண்டாடுகிறோமோ அதேபோல, சென்னை மாநகரத்திலும் கிராமத்தையே கொண்டு வந்து இங்கே அமைத்த காவலர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் நம் காவலர்களுடைய திறம்படப் பணி, அர்ப்பணிப்பு உணர்வு. தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் காவலர்கள். அப்படிப்பட்ட காவலர்களோடு, இன்றைக்கு இந்த தைப் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்பதைத் தெரிவித்து மீண்டும் ஒருமுறை அனைவரு க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்த காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கும் சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் அவர்களுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் நன்றி, வணக்கம். இவ்வாறு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.