அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப் பூதியம் பெற்று வந்த இவர்கள் தற்போது 7 ஆயிரத்து 700 மட்டுமே ஊதியமாக பெற்று வருகின்றனர். தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு இனி வரும் நாட்களில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கபடும் என 2011 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெ.ªஐயலலிதா சட்டப் பேரவையில் உறுதி அளித்தார். அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை கொரானா நோய் பெருந்தொற்று காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது மாதங்கள் ஊதிய பாக்கியை வழங்காமல் இருப்பது வேதனையானது.
கடந்த 2017ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தார். முதலமைச்சர் அளித்த உறுதி மொழியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பும் ஏட்டில் எழுதப்பட்ட ‘சர்க்கரை’ யாகவே நீடிக்கிறது. இனியும் தாமதிக்காமல் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதுடன் கொரானா கால நெருக்கடிகளை சமாளிக்க ஒரு மாத ஊதியம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும் அவர் தனது அறிக்கையில்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கோடாரம்பட்டி பகுதியில் வசித்து வரும் ந.கிருஷ்ணமூர்த்தி மகன் அரிவர்ஷன் (14) கடந்த 15.07.2020 ஆம் தேதி மாலை 5 மணியளவில், இயற்கையின் அவசர உந்துதலால் அருகில் இருந்த புளுதி காட்டில் மலம் கழித்துள்ளார். அந்த நேரத்தில் அந்தப் பக்கம் வந்து ராஜசேகர் என்பவர், மலம் கழிக்கும் புளுதிக் காடு எனக்கு சொந்தமானது. இதில் பட்டியல் சாதியை சார்ந்த நீ மலம் கழித்து அசிங்கப்படுத்த விட்டாய் எனத் திட்டியபடி, கழித்த மலத்தை தின்னும்படி, கழுத்தை பிடித்து அழுத்தி பலவந்தமாக, கை அள்ளச் செய்துள்ளார். இதனால் பாதிக்கபட்ட சிறுவன் அரிவர்ஷன் தனது தந்தையிடம் நடந்த சம்பவத்ததைக் கூறி, அவர் மூலம் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மீது விசாரணை செய்து, வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல்துறை, புகார் கொடுக்க சென்றவர்களை மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் பென்னாகரம் காவல்துறை இருதரப்பு மோதலாக சித்தரிக்க ராஜசேகரிடமும் ஒரு புகாரைப் பெற்று இருதரப்பினர் மீதும் புகார்கள் வந்துள்ளன. இரண்டையும் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. பென்னாகரம் காவல்துறையின் சட்ட அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பட்டியிலின மக்களுக்கு எதிராக, சாதி வெறியர்களின் ஆதிக்கத்தை ஆதரித்து செயல்படும் பென்னாகரம் காவல்துறையைக் கண்டித்து வருகிற 22.07.2020 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தனது அறிககையில் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.