கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. 2019-ல் பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 குற்றங்கள் நடந்துள்ளன. சராசரியாக நாள்தோறும் 87 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதில் 2019-ல் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் மட்டும் 32 ஆயிரத்து 33 நடந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 குற்றங்கள் நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டைவிட 2019-ல் 7.3 சதவீதம் குற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த 2018-ல் 33 ஆயிரத்து 356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகின, 2017-ல் 32,ஆயிரத்து 559 பலாத்கார சம்பவங்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டில் பெரும்பாலான குற்றங்கள் கணவரால் கொடுமை, உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவில் 30.9 சதவீதக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான தாக்குதல் மூலம் 21.8 சதவீத வழக்குகளும், பெண்களைக் கடத்துதல் தொடர்பாக 17.9 சதவீத வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு குற்ற விகிதம் 62.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2018-ல் 58.8 சதவீதமாகவே இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் கடந்த 2019-ல் அதிகரித்துள்ளன. கடந்த 2018-ல் குழந்தைகளுக்கு எதிராக பதிவான குற்றங்களைவிட 2019-ல் 4.5 சதவீதம் குற்றம் பதிவானது. 2019-ல் குழந்தைகளுக்கு எதிராக 1.48 லட்சம் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 35.3 சதவீதம் பாலியல்வன்முறை குற்றங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.