நிலக் கடலை தொலியிலிருந்து குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்

நிலக் கடலை தொலியிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்மார்ட் திரையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒலி மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்தி, மின்சார சேமிப்புக்கு உதவுகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும், பெங்களூரில் உள்ள நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர் கிருஷ்ண பிரசாத், சங்கர் ராவ், ஆகியோர் நிலக்கடலை தொலியிலிருந்து செல்லுலாஸ் அடிப்படையிலான ஸ்மார்ட் திரையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ஸ்மார்ட் திரையில், திரவ படிக மூலக்கூறுகள் பாலிமர் மேட்ரிக்ஸில் கட்டுப்படுத்தப்பட்டன. ஐ.ஐ.டி ரூர்க்கி பேராசிரியர் யுவராஜ் சிங் நேகி தலைமையிலான குழு கடலை தொலியிலிருந்து தயாரித்த செல்லுலோஸ் நானோ கிரிஸ்டல்களைப் (சி.என்.சி) பயன்படுத்தி, இந்த மேட்ரிக்ஸ் உருவாக்கப்பட்டு ஸ்மார்ட் ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டது.

விவசாயக் கழிவின் எந்த செல்லுலோசிலிருந்தும் இந்த ஸ்மார்ட் திரையை உருவாக்க முடியும் என பெங்களூர் நானோ மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், நிலக்கடலை தொலியில் உள்ள சில பொருட்கள் ஸ்மார்ட் திரை தயாரிப்புக்கு மிகவும் உகந்ததாக இருந்ததால், நிலக்கடலையின் செல்லுலோசிலிருந்து ஸ்மார்ட் திரை உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செல்லுலோஸ் அகச்சிவப்பு கதிரின் அளவை கட்டுப்படுத்துவதால், மின்சாரம் குறைவாகச் செலவாகிறது. மேலும், வெப்ப கதீர்வீச்சு அளவை இது குறைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.