உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சட்டத்தைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, 1992ம் ஆண்டு, டிசம்பர்-6ல் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் பட்டப்பகலில் இடித்துத் தள்ளப்பட்டது. கரசேவை என்ற பெயரில் அயோத்தியில் அரங்கேற்றப்பட்ட இந்தக் காலித்தனத்திற்கு நாடெங்கும் இருந்து வன்முறையாளர்கள் மதவெறியைத் தூண்டி அணிதிரட்டப்பட்டனர். அந்த அணிதிரட்டலை பாஜகவின் அன்றைய முன்னணித் தலைவர் எல்.கே.அத்வானி தனது ரதயாத்திரை மூலம் நடத்தினார். ரத்த யாத்திரையாகிவிட்ட ரதயாத்திரையை பிஹார் மாநிலம் சமஷ்டிபூரில் தடுத்து நிறுத்தி, அத்வானியைக் கைது செய்தார் லாலு பிரசாத் யாதவ். அயோத்தியில் பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு அங்கே ராமர் கோவில் கட்ட, செங்கல் ஊர்லங்கள் நடத்தப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக பாபரிமஸ்ஜித் உலகில் அதிகமானோரை சாட்சியாக வைத்து இடித்துத் தகர்க்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் ஆணையம், பாபரி மஸ்ஜித் இடிப்பில் சங்பரிவார, பாஜக தலைவர்களின் பங்கைத் தெளிவாக சுட்டிக் காட்டிப் பட்டியலிட்டிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 30,2020 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறிய லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அனைவரையும் விடுவித்துள்ளது. இது நீதித்துறையில் படிந்த நீங்காத களங்கமாகும். உலகறிய நடந்த குற்றத்திற்கான ஆதாரங்களை சிபிஐ ஒழுங்காக வழங்கவில்லை என்பது அனைவரையும் அதிர வைக்கிறது. இது மாண்புமிக்க நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது. இந்தக் கொடுமையைக் கண்டித்து அக்டோபர் 2, 2020 அன்று மாலை 4 மணிக்கு தமுமுக சார்பில், தோழமை இயக்கத் தலைவர்களின் பங்களிப்புடன் தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளியுடன், முகத்தில் கறுப்புக் கவசம், கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்டம் சார்பில் சென்னை, சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் பேரா.ஜெ. ஹாஜாகனி தலைமை ஏற்றுக் கண்டன உரை நிகழ்த்தினார். தோழமை இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம், தென் மாவட்ட தலைவர் கோரி முஹம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் ரியாசுதீன் உள்ளிட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா கால ஒழுங்கு முறையைப் பின்பற்றி மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.