பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 58 வயது நிறைவடைந்து ஓய்வு பெற்றவர்கள் தவிர, தற்போது சுமார் 12,000 பேர் பணி செய்து வரும் நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
26-08-2011 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரூ.5000 தொகுப்பூதியத்துடன் ஒவ்வொரு ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். வாரத்தில் 3 அரை நாட்கள் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒரு முறை ரூ.2000, பின்னர் ரூ.700 ஊதிய உயர்வு வழங்கப்பட்டு தற்போது ரூ.7,700 பெறுகிறார்கள். இன்றைய பொருளாதார சூழ்நிலையை கருதும் போது இந்த ஊதியம் போதுமானதாக இருக்காது. ஆந்திரா, கோவா, அந்தமான், கர்நாடகா, கேரளா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரை ஊதிய நிர்ணயம் செய்து அந்தந்த மாநிலங்கள் வழங்கி வருகிறார்கள். ஆனால், அகில இந்திய அளவில் கல்விக்கு முன்னோடியாக திகழும் தமிழ்நாட்டில், பட்டப்படிப்பு முடித்து, 10 ஆண்டுகள் பணி செய்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு உரிய ஊதியமின்றி வாழ்வாதாரம் சிரமத்தில் உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வகையில், பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதார நலன் கருதியும், தொய்வின்றி அவர்கள் பணியை சீரும் சிறப்புமாக செய்திட ஊக்குவிக்கவும், 9 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மே மாத ஊதியத்தையும், 7வது நிதிக்குழு பரிந்துரைப்படி 30% ஊதிய உயர்வு, ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிடவும், பணி நிரந்தரம் செய்திடவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்