சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கின் கீழ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கினர். ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அமலாக்கப் பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வராக பரூக் அப்துல்லா இருந்தபோது, கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அமைப்புக்கு வழங்கிய நிதியில் ரூ.43.69 கோடி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச் செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஸன் அகமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அகமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த 2005-2006 முதல் 2011 -2012 வரை பிசிசிஐ அமைப்பிடம் 3 விதமான வங்கிக் கணக்கில் ரூ.94.06 கோடியை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பு பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பணம் கணக்கில் கொண்டு வரப்பட வில்லை. இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரூக் அப்துல்லா விடம் சண்டிகரில் வைத்து விசாரணை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் ஊழல் நடந்தபோது அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லாதான் இருந்தார். அவருக்குத் தெரியாமல் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவருக்குப் பங்கு இருக்கக்கூடும் என்றும் அமலாக்கப் பிரிவு நம்புகிறது. அந்த அடிப்படையில்தான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பரூக் அப்துல்லா கடந்த அக்டோபர் மாதத்தில் பலமுறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் ஆஜரானார். அந்த வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில், ”சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவின் ஸ்ரீநகரில் குப்கர் சாலையில் உள்ள வீடு, தன்மார்கில் கதிபோரா பகுதியில் உள்ள வீடு, ஜம்முவில் சுன்ஜுவானில் பாதிந்தியில் உள்ள ஒரு இல்லம், ஸ்ரீநகரில் போஷ் பகுதியில் வணிக வளாகம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.60 முதல் 70 கோடி பெறும். ஆனால், அமலாக்கப் பிரிவு மதிப்பின் அடிப்படையில் சொத்துகளின் மதிப்பு ரூ.11.86 கோடியாகும். ஜம்முவில் சுன்ஜுவானில் பாதிந்தியில் பரூக் அப்துல்லா வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பரூக் அப்துல்லா இருந்தபோது, ஏராளமான பணத்தைத் தவறாகக் கையாண்டது, சட்டவிரோதமாகப் பலர் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நிதியைக் கையாளும் அதிகாரம் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.