வடபழநி-மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் எனக் கூறி, வீட்டு உபயோக பொருள் விற்பனையாளரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில், கிளை மேலாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன், 35. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தான், மத்திய தொழில் பாதுகாப்புப்படை அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு புதிய, ‘டிவி’ வேண்டும் எனவும் தெரிவித்தார். அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில், ‘டிவி’யை, ‘டெலிவரி’ செய்யும் படி கூறிய அவர், ஆன்லைன் செயலி மூலம் பணம் அனுப்பி விடுவதாக கூறினார். நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக, அடையாள அட்டை ஒன்றையும், ‘வாட்ஸ் ஆப்’ செயலியில் அனுப்பினார். பின், மணிகண்டனின் எண்ணிற்கு பணம் அனுப்புவதாக கூறி முதலில், 5 ரூபாய் அனுப்பச் சொல்லியுள்ளார். மீண்டும், 5,000 ஆயிரம் அனுப்ப சொன்னதால், மணிகண்டனும் நம்பி அனுப்பியுள்ளார்.
சிறிது நேரத்தில் மணிகண்டனின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம், 66 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து மத்திய தொழிற்படை வீரர் என, அறிமுகம் செய்த நபரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், இதுகுறித்து, வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.