பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, மத்திய அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர்-08 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்பதை உறுதி செய்திருந்தது. எனவே, அந்தக் குற்றத்தை இழைத்த குற்றவாளிகள் அதற்காக சதித் திட்டத்தைத் தீட்டியவர்கள் அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. தங்களுக்கு எதிரானது என்று கருதினாலும்கூட, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய தரப்பினரும் பாபர் மசூதி இடித்த வழக்கில் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால், அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மாறாக இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது.
இந்த வழக்கில் சதி திட்டம் எதுவும் இல்லையென அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தபோது, அதற்கு எதிராக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இதில் சதித்திட்டம் இருக்கிறது. எனவே, சிறப்பு நீதிமன்றம் அதை விசாரிக்கவேண்டும் என 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆணையிட்டது. அதுமட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு-142’இன் கீழ் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ரேபரேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்கையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவையற்ற காலதாமத்தைச் செய்துகொண்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம்தான் அவ்வப்போது உசுப்பி வழக்கை விரைவுபடுத்திக்கொண்டிருந்தது. அப்படி உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தும் கூட இன்று சிபிஐ சிறப்புநீதிமன்றம் இப்படியொரு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிற ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வழக்கில் சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் கூட வேண்டும்; அங்கே இருக்கின்ற பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கற்களை எடுத்து வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு அன்றைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு திரட்டியதை அனைவரும் அறிவோம். அதுபோலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தார்கள் என்பதற்கு ஊடகங்களிலேயே ஏராளமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பத்தக்கனவாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்புக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடும். எனவே, இதை உணர்ந்து மத்திய அரசு இவ்வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரமாவளவன் கூறியுள்ளார்.