நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கத்தில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் முஹம்மது ரசீன், செயற்குழு உறுப்பினர் முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் கள் அ.ச. உமர் பாரூக், அப்துல் ஹமீது, செயலாளர் அமீர் ஹம்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நாகூர் மீரான் அனைவரையும் வரவேற்றார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி திருப்பூர் சுடலை, மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, நாம் தமிழர் கட்சி மன்சூர் அலிகான், இந்திய தவ்ஹீது ஜமாத் தலைவர் பாக்கர், தமிழ் தேச மக்கள் முன்னணி செந்தில், வஹ்ததே இஸ்லாமி மாநில தலைவர் செய்யது முஹமது புஹாரி, ஐக்கிய சமாதான பேரவை மௌலவி முஜிபுர் ரஹ்மான் பாகவி, பெண் விடுதலை கட்சி தலைவர், சமூக ஆசிரியர் சபரிமாலா, சமுதாய ஆர்வலர் முஹம்மது ஹனிபா, பி.யூ.சி.எல் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சங்கரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி பேசியதாவது,
பாப்புலர் ஃப்ரண்ட் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மக்கள் இயக்கம். இந்திய அரசியல் சாசனத்தின் படி செயலாற்றுகிறது. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கின்றது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. மக்களை பிளவுபடுத்தும் மனுதர்ம ஆட்சிக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கிறது. அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுகிறது. எனவே தான் மத்திய அரசு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பை குறிவைக்கிறது. அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஏற்றத்தாழ்வுகளை உயர்த்தி பிடிக்கிறது. சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்று கூறுகிறது. இவற்றிற்கு எதிராக பாப்புலர் ஃப்ரன்ட் உறுதியாக போராடுவதால் மத்திய அரசை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பாப்புலர் ஃப்ரன்ட் – ஐ முடக்க நினைக்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் மீது தொடர்ச்சியான அடக்குமுறையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது மத்திய அரசு. அதற்காக சி.பி.ஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை போன்ற ஏஜன்ஸிகளை அடியாட்கள் போன்று பயன்படுத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மீது யுஏபிஏ என்கிற கருப்பு சட்டத்தை கொண்டு ஒடுக்கி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்காக குரல் கொடுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற சமூக அமைப்புகள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் ஊடகங்களில் பொய் செய்தியை பரப்புவது, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை போன்ற அரசு ஏஜன்ஸிகளை கொண்டு ‘சோதனை’ என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்வது என ஜனநாயகத்தின் குரல்களை நெறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். எனவே வலுவான சட்ட போராட்டங்கள் மூலமும், மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் இத்தகைய சூழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரன்ட் முறியடித்து தொடர்ந்து மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கும் என்று கூறினார். இறுதியாக சென்னை மண்டல செயலாளர் அஹமது முகைதீன் நன்றி கூறினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.