புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஜெயபிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தையறுத்து கொலை செய்யப் பட்டிருக்கிறாள் என்கிற செய்தி இதயத்தை அடித்து சுக்கு நூறாக்கிவிட்டது. “காளி கோவிலுக்கு வா பொங்கல் வாங்கி தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறி பூப்போன்ற எங்கள் வீட்டுப் பிள்ளையை அழைத்து சென்று கொடூரமாக பிய்த்தெறிந்து கண் மாயில் வீசிய ராஜா என்கிற அந்த ரத்த காட்டேறியை விசாரித்து, ஆவணங்களை உறுதிபடுத்தி உடனடியாக தூக்கிலிட அவசர சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் சிதைக்கப்படும் பச்சிளம் பிஞ்சுகளை காப்பதற்கு எந்த சட்டமும் இதுவரை உறுதுணையாக இருக்கவில்லை. காணொளி காட்சிகளுடன் கூடிய எங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கதறல்களுக்கு பிறகும் பொள்ளாச்சி பிசாசுகளை அடியோடு வேரறுத்து இவர்களின் ஆட்சி நல்லாட்சி என நிரூபித்திருந்தால் இன்று இந்த பிஞ்சுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?
நாங்கள் தூக்கு தண்டனைக்கு எதிரானவர்கள்தான். மனிதர்களை தூக்கிலிடு வதைத்தான் எதிர்க்கிறோமே ஒழிய இப்படிப்பட்ட மிருகங்களை தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்பதில் எங்களுக்கு மட்டுமல்ல மனிதம் சுமக்கும் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்பதை உறுதியாக நம்புகிறோம்.
விபத்து நடந்து உயிரிழந்தால் வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுக்கலாம். அல்லது விபத்திற்கு தகுந்த நிவாரணமளிக்கலாம். ஈவு இரக்கமற்ற பாலியல் வன்கொலை களுக்கு நீதியை தராமல் நிதியை மட்டும் தந்து சரிகட்டுவது எப்படி அறமாகும்? இப்பொழுது வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஐந்து இலட்ச ரூபாய் நிவாரணத்தொகை வழங்கி இருக்கும் தமிழக அரசின் செயல் கூட அந்த பிஞ்சு உயிரை அசிங்கப்படுத்தியதாகவே அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தெய்வத்திற்குச் சமமான குழந்தையை கொடூரமாக கொன்றவனுக்கு கொடுக்கும் தண்டனையால்தான் அக்குடும்பம் ஆறுதல் அடையுமே அன்றி நீங்கள் கொடுக்கும் பணத்தால் அல்ல என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? நீதியை கொடுக்க வேண்டிய அரசு நிதியை திணிப்பது பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக பிரகடனப்படுத்துகிறதோ என்கிற சந்தேகம் சாமானியர்களுக்கு வலுத்துக்கொண்டே போகிறது. தேசிய குழந்தைகள் நல வாரியம், சம்பந்தப்பட்ட சட்டத்துறை அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட வேண்டும். தமிழக அரசும் நொடிப் பொழுது கூட தாமதிக்காமல் அமைச்சரவையை கூட்டி முப்பது நாட்களுக்குள் சிறுமிகள், பெண்கள் சம்மந்தப்பட்ட பாலியல் வன்கொலைகளுக்கு எதிராகச் தனி சிறப்புச் சட்டம் இயற்றி இனி வரும் காலங்களிலேனும் இப்படிப்பட்ட கொடூர குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். என்றார் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன்.