கொரோனா தொற்றின் காரணமாக மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில் பொது ஊரடங்கு காரணமாகவும், பொருளாதார பேரழிவினாலும் கடுமையான துன்பத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் துன்பத்தை போக்குகிற வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசு நாள்தோறும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பதினைந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும். கடந்த மே 2014 இல் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பதினொரு முறை கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 258 சதவீதமும், ஒரு லிட்டர் டீசலுக்கு 819 சதவீதமும் உயர்த்தியிருக்கிறது.
கடந்த மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது. கடந்த ஜுலை 12 ஆம் தேதி நிலவரப்படி ரூபாய் 32.98 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசலில் கலால் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது தற்போது ரூபாய் 31.86 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலில் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டுவரி அடிப்படை விலையை விட 69 சதவிகிதம் வரியாக மத்திய, மாநில அரசுகள் வசூலிக்கின்றன.
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த மார்ச் 5 ஆம் தேதி பெட்ரோல் விலை ரூபாய் 3 ஆக உயர்த்தியதில் ரூபாய் 39 ஆயிரம் கோடியும், கடந்த ஜுன் 5 ஆம் தேதி பெட்ரோல் விலையை ரூபாய் 13, டீசல் ரூபாய் 10 ஆக உயர்த்தியதில் ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியும், கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.42, டீசல் விலை ரூபாய் 3.31 ஆக உயர்த்தியதில் ரூபாய் 44 ஆயிரத்து 500 கோடியும் மத்திய பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்புகிற வகையில் வரிவிதிப்பு செய்திருக்கிறது.
ரோம் நகரம் தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பீடில் வாசித்ததை போல கொரோனாவின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கும் போது பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்? வருமானத்தை பெருக்கிக் கொள்கிற கொடூர போக்குக் கொண்ட அரசாக நரேந்திர மோடியினுடைய அரசு விளங்கி வருகிறது. இந்த விலை உயர்வு ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது கடுமையான சுமையை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றி வைத்திருக்கிறது. இந்த சுமையை அகற்றுகிற வகையில் பெட்ரோல் டீசல் விலையுர்வை திரும்ப பெறவில்லையெனில் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, மத்திய பா.ஜ.க. அரசு எதிர்காலத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடும் என்பதை எவரும் மறுக்க முடியாது. என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.