பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என 2014 தேர்தலில் வாக்குறுதி கொடுத்த நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவிக்கிற துன்பங்களுக்கு அளவே இல்லை. ஆனால் சாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெறுவதற்கு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தைவிலை குறைவாக இருக்கும் நிலையில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை நஷ்டத்தில் விற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

இந்நிலை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு , கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்கொலை சாவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதற்கு பா.ஜ.க. ஆட்சியின் தவறான விவசாய கொள்கை தான் காரணம். தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் கடந்த ஜூன் 5 ஆம் நாள் மூன்று அவசரச் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்தது. இதை செப்டம்பர் மாதத்தில் மக்களவையில் மிருகபல பெரும்பான்மையோடும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், குரல் ஓட்டெடுப்பு மூலம் பலவந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

விவசாயச் சங்கங்களோ, எதிர்க்கட்சிகளோ, எந்த கோரிக்கைகளையும் முன்வைக்காத நிலையிலும், மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமலும், அவசர அவசரமாக மூன்று அவசரச் சட்டங்கள் ஏன் நிறைவேற்றப்பட்டன? யாருடைய நலனைக் காப்பாற்ற நிறைவேற்றப்பட்டன? என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க.விடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த மூன்று அவசரச் சட்டங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை, பிரிக்க முடியாதவை. இவை ஒட்டுமொத்தமாகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி விடக்கூடியதாகும். ‘ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை’ என்பதை நிலைநாட்டி, தனியார் பங்களிப்பை இச்சட்டம் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு மோடி அரசு இழைத்த மிகப்பெரிய அநீதியாகும்.

விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாநிலம் முழுவதும் பரவலாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வருகிற அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில் கண்டன மாநாடு திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டை ஒட்டி விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்கிறோம்? என்கிற நூலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. வெளியிடுகிறார். இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சஞ்சய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திரு. கே.வி.தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு. சு.திருநாவுக்கரசர் எம்.பி., திரு. எம்.கிருஷ்ணசாமி, மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. பி.மாணிக்கம் தாகூர் எம்.பி., டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்.பி., தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். திருவண்ணாமலை விவசாயிகள் மாநாட்டில் செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி., வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. செங்கம் ஜி.குமார், விவசாயிகள் பிரிவு தலைவர் திரு. எஸ்.பவன்குமார் ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள். திருவண்ணாமலை மாநாடு தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தில் திருப்பம் ஏற்படுத்துகிற வகையில் அமைய இருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழக விவசாயிகளின் கண்டனத்தை வெளிப்படுத்துகிற வகையில் மாநாடு அமையப்போகிறது.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசின் அவசர வேளாண் சட்டங்களால் இந்திய விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டங்களுக்குத் தமிழக விவசாயிகளின் கண்டனத்தை பா.ஜ.க. அரசுக்கு உணர்த்துகிற வகையில் திருவண்ணாமலை மாநாடு வெற்றிகரமாக அமைந்திட விவசாயப் பெருங்குடி மக்களை அன்போடு அழைக்கிறேன். விவசாயிகளின் ஒற்றுமையின் மூலமே விவசாய விரோத சட்டங்களை முறியடிக்க முடியும் என்பதைத் திருவண்ணாமலை மாநாடு உணர்த்துகிற வகையில் அக்டோபர் 11 ஆம் தேதி கூடுவோம். பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை முறியடிக்கப் பெருந்திரளாக அணிதிரண்டு வர அன்போடு அழைக்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.