ஆண்டுதோறும் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளித்திட 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இது, பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைத் திட்டம் என்று பாரதீயஜனதா பெருமை பேசி வந்துள்ளது. இந்த திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப் படுத்தியபோதே, இதற்கு விவசாயிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. இந் நிலையில் இந்தத் திட்டத்தை சரியான பயனாளிகளிடம் கொண்டுசேர்க்க மத்திய அரசு தவறிவிட்டது. இத்திட்டத்தை அமல்படுத்தியதில் தமிழகத்தில் மட்டுமே 110 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயிகள் மீது அக்கறை கொண்ட அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள தகவல் நாட்டையே அதிர வைத்துள்ளது.
பிரதமரின் இந்த விவசாயத் திட்டத்தின் மூலம் இரு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில், தகுதியற்ற விவசாயிகள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இரு பிரிவினரும் நிதியுதவி பெற்றுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத் தகவலில் அம்பலமாகி உள்ளது. மேலும் தகுதியற்ற விவசாயிகளில் நிதியுதவி பெற்றதில் 55.58 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துவோர். மீதமுள்ள 44.41 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள் ஆவர். 2020, ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரி செலுத்திய பணக்காரர்களுக்கும் சேர்த்து விவசாயிகள் போர்வையில் சேர்த்து 1,364.13 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களே, இந்த நிதியுதவி தவறானவர்கள் கைகளுக்குச் சென்றுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மோசடி அதிகம் நடைபெற்ற மாநிலங்களில் பஞ்சாப் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக, மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் மோசடி நடந்துள்ளது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யாத மைய அரசு, அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக்கூட முறைகேடாக தகுதியற்ற மற்றவர்களுக்கு வழங்கியிருப்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம், வெட்கக்கேடு என எச்சரிக்கிறேன். செயல்திறனற்ற மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மோசடி செய்யப்பட்ட பணம் முழுவதையும் இரும்புக்கரம் கொண்டு மீட்டு, தகுதியான விவசாயப் பெருமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பிரதமரையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.