பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது, புதிய அமைச்சரவை என்னுடைய தலைமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முதலில் டெல்லி தலைநகருக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மாலை நேரத்தில் இங்கு வருவதற்கு முன்பு மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன்.  கொரோனா என்ற பெருந்தொற்று பெரிய அளவில் பரவிக் கொண்டிருந்த காரணத்தினால், பதவியேற்றவுடனேயே மாண்புமிகு பிரதமர் அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை, நியாயமாக, முன்கூட்டியே வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை நான் பெற முடியவில்லை. இப்போது கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் குறைந்து கொண்டு வரக்கூடிய நிலையில் இருக்கிறது. அதனால், மாண்புமிகு பிரதமரிடத்தில் நான் சந்திப்பதற்கு நேரம் கேட்டேன், அவரும் நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து, அவர் ஒதுக்கித் தந்த அந்த நேரத்தைப் பயன்படுத்தி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். மாண்புமிகு பிரதமர் அவர்களுடனான சந்திப்பு ஒரு மகிழ்ச்சியான சந்திப்பாக, இன்னும் சொல்லப்போனால், ஒரு மனநிறைவு தரக்கூடிய ஒரு சந்திப்பாக இருந்தது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நான் சென்றவுடன், தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய எனக்கு அவர் முதலில்  வாழ்த்து கூறினார். அந்த வாழ்த்தைப் பெற்று அவருக்கு நான் என்னுடைய நன்றியைச் சொல்லியிருக்கிறேன். 

தமிழ்நாட்டினுடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்கிற உறுதிமொழியை அவர் எங்களுக்கு வழங்கியிருக்கிறார். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், என்னுடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்பதையும்  வெளிப்படையாகவே எங்களிடத்தில் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களையும், கோரிக்கைகளையும் முழுமையாக தயாரித்து அவரிடம் கோரிக்கை மனு (Memorandum)கொடுத்திருக்கிறோம். அதை முழுமையாக சொல்ல எனக்கு இப்போது நேரமில்லை. அதனால் தலைப்புச் செய்தியாக உங்களிடம் சொல்ல விரும்புவது, முக்கியமாக கூடுதலான தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் இருக்கக்கூடிய தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும். அதேபோல தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு முழுமையாக  வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரி நிலுவைத் தொகையை முழுமையாக தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். நீர் பிரச்சனையை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இரத்து செய்யப்பட வேண்டும், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்திருக்கிறோம். காவேரி நீருக்கு தடையாக இருக்கக்கூடிய மேகதாது அணைத் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சொல்லி இருக்கிறோம். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும், கோதாவரி-காவேரி இணைப்பு, காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.  இலங்கைக் கடற்படையினரால் தொல்லைக்கு உள்ளாகி வரக்கூடிய தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும், கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், புதிய மின்சாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டத்தை அவர்கள் முன்னெடுத்து முயற்சிக்க வேண்டும். மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்,  ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும், அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.  சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஈழத்திலிருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும். உலக பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதியின் அளவுகோலை மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய உரிமையை தந்தாக வேண்டும். சேது சமுத்திரத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மேம்பாட்டுத் திட்டங்கள், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகளை மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடத்தில் நாங்கள் கோரிக்கைகளாக (Memorandum) கொடுத்திருக்கிறோம்.  சில செய்திகளை தலைப்புச் செய்திகளாக நேரடியாக சொல்லியிருக்கிறோம். இதில் பல பிரச்சனைகள் நேரடியாக ஒன்றிய அரசு செய்ய வேண்டிய பிரச்சனைகள், இன்னும் பல மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க வேண்டிய பிரச்சனைகள்,  சில பிரச்சனைகள் இரண்டு அரசுகளும் இணைந்து செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து இந்தக் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும், நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை எனது இந்த தில்லி பயணம் எனக்கு கொடுத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். இப்போது வைத்திருக்கும் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு இன்றைக்கு மட்டுமல்ல, தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுப்போம், அப்படி கொடுக்கும் நேரத்தில், இந்த தலைநகரில் இருக்கக்கூடிய தமிழ் ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாட வேண்டும் என்கின்ற அன்பான கோரிக்கையையும் இந்த நேரத்தில் எடுத்து வைக்கிறேன். இந்த அளவோடு மாண்புமிகு பிரதமர் அவர்களிடத்தில் எடுத்துச் சொன்ன கோரிக்கைகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். 

கேள்வி – நீட் தேர்வு, தமிழை ஆட்சி மொழி ஆக்கப்படும், கச்சத்தீவு பிரச்சனை, மீனவர் பிரச்சனையாகட்டும், கடந்த 5 வருடங்களாகவும், அதற்கு முன்பும் நிறைவேற்றப்படாத திட்டங்களாகவும், அறிவிப்புகளாகவும் இருந்த இது வரக்கூடிய நாட்களில் மட்டும் எப்படி நிறைவேற்றப்படும் என்பதை ந்த அளவு நம்புவது, அதற்கான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வகையில்  கொடுக்கப் போகிறீர்கள்.

பதில் – நாங்கள் விரிவாக கொடுத்தது மட்டுமல்ல, காரண காரியங்களை சொல்லி இருக்கிறோம். நான் முழுமையாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களோடு, அதிகாரிகளோடு கலந்து பேசி, நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பேன், நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதி கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

கேள்வி – தமிழக அரசு எந்தவகையான அணுகுமுறையை மத்திய அரசிடம் கடைபிடிக்கும்? மோதல் போக்கை கடைபிடிக்குமா அல்லது இணக்கமான போக்கை கடைபிடிக்குமா?

பதில்  – எங்களை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது, உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். அந்த அடிப்படையில் எங்களுடைய நடைமுறை நிச்சயமாக இருக்கும். 

கேள்வி –  7 பேர் விடுதலையில் தமிழக அரசினுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன?  அவர்களை விடுவிப்பதற்கு பதிலாக ஒரு நீண்ட கால பரோல் வழங்கலாம் என்ற ஒரு தகவல் வந்துள்ளது.

பதில் – மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அதை மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி உள்ளார். மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு நினைவூட்டல் கடிதம் நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன் அனுப்பி உள்ளோம். தற்போது அது நீதிமன்றத்தில் உள்ளது. அது போகிற போக்கை பார்த்து, எங்களுடைய நடைமுறையை  கடைபிடிப்போம். 

கேள்வி – தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து….

பதில் – தமிழ்நாட்டிற்கு போதுமான தடுப்பூசி இதுவரை வழங்கவில்லை என்பது உண்மை தான், அதை நான் மறுக்கவில்லை. தடுப்பூசி போதுமான அளவிற்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் அளித்திருக்கிறோம். அவரும் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். அவ்வப்போது மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்களும் அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் சொல்கிறார்கள். இருந்தாலும் செங்கல்பட்டில் இருக்கிற, நீலகிரி மாவட்டத்தில் இருக்கிற தடுப்பூசி மருந்து தயாரிக்கிற தொழிற்சாலையை இயக்கினாலே இதை ஒரளவுக்கு தீர்க்க முடியும், அப்படி அந்த முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்கிறோம். இன்றைக்கும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் தெரிவித்து உள்ளோம். 

கேள்வி – திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, முதியோருக்கான உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அது தொடர்பாக இன்றைக்கு பிரதமர் அவர்களுடனான சந்திப்பில் நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளீர்களா? தமிழகத்தில் அந்த திட்டங்கள் எப்போது செயல்பட வாய்ப்பு இருக்கிறது?

பதில் – ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. எந்த அளவிற்கு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். நிச்சயமாக தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுகின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபடுகிறோம். அதற்கான முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறோம். 

கேள்வி – தடுப்பூசி பற்றி தான் என்னுடைய கேள்வி. தடுப்பூசி வழங்குவது தொடர்பான தெளிவான வெளிப்படைத்தன்மை எப்போது வரும்?

பதில் – முறையாக கேட்கிற அளவில் கொடுத்தால் எல்லோருக்கும் கிட்டத்தட்ட வந்துவிடும். தடுப்பூசி பற்றாக்குறை பற்றி கூட சொல்லக் கூடாது என்று ஒன்றிய அரசு கூறியிருக்கின்றது. இதிலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது தான். 

கேள்வி – பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக நிறைய வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து நீங்கள் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறீர்கள், அதற்காக டில்லி பத்திரிகையாளர்கள் சார்பில் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆட்சியின் போது, ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும், மூட வேண்டும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தீர்கள், டாஸ்மாக்கை ஒட்டுமொத்தமாக மூட வாய்ப்பு இருக்கிறதா?

பதில் – படிப்படியாக குறைக்கப்படும் என்ற அடிப்படையில் தான் சொல்லி இருக்கிறோம். படிப்படியாக நிச்சயமாக குறைக்கப்படும். கடந்த கால ஆட்சியில் எப்படி படிப்படியாக குறைக்கப்பட்டதோ, அதே அடிப்படையில் குறைக்கப்படும். 

கேள்வி – திமுக ஆட்சிக்கு வராது, அப்படி வந்தாலும், மு.க. ஸ்டாலின் திறமையான முதலமைச்சராக செயல்பட மாட்டார் என்று பலரும் புகார் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நீங்கள் பதவிக்கு வந்து 42 நாட்கள் ஆகிறது, முதலமைச்சராக இந்த 42 நாட்களும் எவ்வாறு சென்று கொண்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு நீங்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டால் இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லாம் நான் செய்வேன், நடத்துவேன் என்ற ஒரு எண்ணத்தில் இதுபோன்று நடவடிக்கைகளை செய்து கொண்டு இருக்கிறீர்களா? 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள், இப்போது டில்லிக்கு எல்லாம் வந்திருக்கிறீர்கள், திட்டமிட்டு நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்களா?

பதில் – ஒரே வரியில் சொல்கிறேன். ட்டு போட்டவர்களுக்காக மட்டும் அல்ல, ட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும், எங்களுக்கு ட்டு போடாதவர்கள் எங்களுக்கு ட்டு போடவில்லையே என்று வருத்தப்பட வேண்டும். அப்படி எங்கள் பணி இருக்கும். அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்.