பிரான்ஸில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தல்

நுண்ணறிவு தகவலின் அடிப்படையில், பிரான்ஸில் இருந்து வந்த ஒரு தபால் பார்சலை போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு நெகிழிப் பை இருந்ததும், அதற்குள் எம் எம் டி ஏ என்னும் போதை பொருள் என்று சந்தேகப்படக்கூடிய இளஞ்சிவப்பு நிற மாத்திரைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 'ACAB Pig' என்ற பெயருடைய  இந்த மாத்திரைகள் பன்றி வடிவில் இருக்கும். 250 எம் ஜி மதிப்புள்ள அதிக சக்தி வாய்ந்த எம் எம் டி ஏ மாத்திரைகள்  அதில் இருந்தன. 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 130 எம் எம் டி ஏ மாத்திரைகள் தேசிய போதைப் பொருள் தடுப்பு சட்டம்  1985-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. வடக்கு பிரான்சில் உள்ள பவுலைன்வில்லே என்னும் நகரத்தில் இருந்து  அனுப்பப்பட்டிருந்த இந்த மாத்திரைகள் சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்திருந்தன. அந்த முகவரிக்கு ஒரு குழு சென்றபோது, அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு என்பதும் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீடு பூட்டப்பட்டு இருந்ததும்  தெரியவந்தது. விசாரணையில் பொது முடக்கத்தில் இருந்து அங்கு யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.