பிஹார் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாதென தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடை ஊடகங்களுக்கு மட்டுமல்ல, ஜோதிடர்கள், ஓலைச்சுவடி பார்ப்பவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் அவர்களும் முடிவு குறித்து கருத்துகளை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. இம்மாதம் 28 ஆம் தேதி, நவம்பர் 3 ஆம் தேதி, நவம்பர் 7 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி நடக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு நேர்மையாகவும், நியாயமாகவும் நடப்பதற்காக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் இருந்து எந்தவிதமான கருத்துக்கணிப்பு முடிவுகளையும், கட்டுரைகளையும், வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தில் பிரிவு 126ஏ-ன்படி இந்த உத்தரவு தேர்தலின் போது பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவது ஊடகங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. “கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பிரிவு 126ஏ-ன் படி தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்து எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிவிக்கவோ, பிரசுரிக்கவோ, பரப்பவோ கூடாது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவரை இந்தத் தடை உத்தரவு பொருந்தும். இந்தத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும் தடை அச்சு, செய்தி சேனல்களுக்கு மட்டுமல்ல, ஜோதிடர்கள், ஓலைச்சுவடி, கார்டுகள் மூலம் கணித்துச் சொல்பவர்கள், அரசியல் ஆலோசகர்கள், ஆகியோருக்கும் பொருந்தும். அவர்களும் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துகளை வெளியிடக்கூடாது. இவ்வாறு வெளியிடுவது வாக்காளர்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு வெளியிடுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி அக்டோபர் 28-ம் தேதி காலை 7 மணி முதல், நவம்பர் மாதம் 7-ம் தேதி மாலை 6.30 மணிவரை அச்சு, செய்தி சேனல்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் முடிவு குறித்த கருத்துகளை வெளியிடக்கூடாது. நேர்மையாகவும், சுதந்திரமாகவும், தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்’’. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.