பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீச்சு: நீங்கள் வீசினாலும் பேசுவேன் எனப் பேச்சு

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டிருந்தபோது,  கூட்டத்திலிருந்த ஒருவர் வெங்காயத்தை வீசினார். ஆனால், அவர் மீது படவில்லை. இதைப் பார்த்த நிதிஷ் குமார்  தனது பேச்சை நிறுத்தாமல் வெங்காயத்தை வீசுங்கள். நீங்கள் தொடர்ந்து வீசினாலும் பேசுவதை நிறுத்தமாட்டேன்  என்று தெரிவித்தார். பிஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்
கட்டமாக 71 தொகுதிகளுக்குக் கடந்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 3-வது கட்ட வாக்குப்பதிவு 7-ம் தேதியும், 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும்  நடக்கிறது. இந்நிலையில் 3-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தீவிரமாக  இறங்கியுள்ளன. மதுபானி நகரில் உள்ள ஹர்லாக்கி எனும் பகுதியில் பேரணியிலும், தேர்தல் பொதுக்கூட்டத்திலும்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் பங்கேற்றார். அப்போது தேர்தல் பிரச்சார  மேடையி்ல் முதல்வர் நிதிஷ் குமார் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் வெங்காயத்தைச் சரமாரியாக  நிதிஷ் குமாரை நோக்கி வீசினார். ஆனால், மேடையில் விழுந்த வெங்காயம் நிதிஷ் குமார் மீது படவில்லை.  உடனடியாக நிதிஷ் குமாரின் காப்பாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஆனால், நிதிஷ் குமார் தனது பேச்சை
நிறுத்தவில்லை. “வீசுங்கள், இன்னும் வெங்காயத்தை வீசுங்கள். நீங்கள் வீசினாலும் நான் பேச்சை நிறுத்தமாட்டேன்”  எனக் கூறிய நிதிஷ் குமார் தொடர்ந்து பேசினார்.

வெங்காயத்தை வீசி எறிந்த நபரை போலீஸார் பிடித்துச் சென்றனர். ஆனால் அதைப் பார்த்த நிதிஷ் குமார், அந்த நபரை  விட்டுவிடுங்கள். அவரைக் கைது செய்து கவனத்தை அங்கு செலுத்த வேண்டாம் எனத் தெரிவித்தார். நிதிஷ் குமார்  தொடர்ந்து பேசுகையில், “லாலுபிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி இருவரும் 15 ஆண்டுகள் முதல்வராக  இருந்து பிஹார் மாநிலத்தை அழித்தனர். 15 ஆண்டுகளில் லாலுபிரசாத் யாதவ் வேலைவாய்ப்பு வழங்காத நிலையில்,  தேஜஸ்வி யாதவ் எவ்வாறு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவார்? என்னுடைய 6 ஆண்டுகள்  ஆட்சியுடன் ஒப்பிடும்போது, அவர்கள் 95 ஆயிரம் வேலைவாய்ப்புகள்தான் வழங்கியுள்ளனர்’’ எனத் தெரிவித்தார். நிதிஷ் குமாரின் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ்,
ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் கூறினாலும் அதை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மறுக்கின்றன. இந்தத்  தேர்தலில் பல்வேறு இடங்களில் நிதிஷ் குமார் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றபோது தனது நிலைமாறி, பலரைத்  திட்டியுள்ளார். சாப்ரா தொகுதியில் பிரச்சாரத்துக்கு நிதிஷ் குமார் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவர் லாலுபிரசாத்  வாழ்க என்று கோஷமிட்டார். இதைக் கேட்ட நிதிஷ் குமார் கோபப்பட்டு, “யாரது முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள்.  இவ்வாறு பேசுபவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்க வேண்டாம். எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாவிட்டால்  பரவாயில்லை. உங்கள் வாக்குகளை அந்த நபருக்குச் செலுத்தி பிஹாரை அழித்துவிடாதீர்கள்’’ எனத் தெரிவித்தார்.