புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார்

புதிய பிஹாரைக் கட்டமைக்க சரியான நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். பாஜக – நிதிஷ் கூட்டணி அதிகார போதையினாலும், அகங்காரத்தாலும் பாதை மாறிவிட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. 2-வது கட்டத் தேர்தல் நவம்பர் 4-ம் தேதியும், 3-ம் கட்டத் தேர்தல் 7-ம் தேதியும் நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தச் சூழலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 நிமிடங்கள் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

”நிதிஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசு நல்ல விஷயங்களைச் சொல்லவும் இல்லை. நல்லதைச் செய்யவும் இல்லை. நிதிஷ் ஆட்சியில் உதவ ஆளின்றி தொழிலாளர்கள் நிராதரவாக இருக்கிறார்கள். விவசாயிகள் வேதனையிலும், இளைஞர்கள் மனவிரக்தியிலும் இருக்கிறார்கள். அதிகாரப் போதையினாலும் அகங்காரத்தாலும், பிஹார் அரசு, தன்னுடைய பாதையிலிருந்து விலகிவிட்டது. நிதிஷ் குமார் பேசும் வார்த்தைகளும், செயலும் சந்தேகத்தை வரவழைக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் வேதனையில் இருக்கிறார்கள். மாநிலத்தின் பொருளாதாரச் சுமை மக்கள் மீதுதான் விழுகிறது. இந்திய விவசாயிகள் மிகத்தீவிரமான சிக்கலில் விழுந்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், மகாதலித் மக்களும் அழிக்கப்படுகிறார்கள். இதேபோன்ற கதிதான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் நடக்கிறது. பிஹார் மாநிலத்தின் மக்கள் காங்கிரஸ் மகாபந்தன் கூட்டணிக்கு ஆதரவாக இருங்கள். இதுதான் உண்மையான பிஹார். மத்திய அரசும், பிஹாரில் உள்ள அரசும்தான் பண மதிப்பிழப்பு, லாக்டவுன், பொருளாதார முடக்கம், வேலையிழப்பு ஆகியவற்றைக் கொண்டுவந்தன. அடுத்த தலைமுறையினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கான பயிர்களுக்கும் புதிய பிஹாரைக் கட்டமைப்போம் என வாக்குறுதி அளித்து அழைத்தது. பிஹாரில் ஆட்சி மாற்றத்தையும், மாற்றத்தையும் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. அச்சுறுத்தியும், குற்றங்கள் செய்தும் அரசை அமைக்க முடியாது”. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.