வளைகுடா நாடான சவுதி அரேபியா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் எந்த யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபிய அரசு அனுமதி்க்கவில்லை. புனித பயணம் வரும் வெளிநாட்டு மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புனித ரமலான் பண்டிகையன்றுகூட மக்கள் யாரையும் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. முதல் நாளான இன்று மெக்கா புனித மசூதிக்குள் அதிகபட்சமாக 6 ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாருக்கும் அனுமதியளி்க்காமல், உள்நாட்டு மக்களுக்கு மட்டும் தொழுகை நடத்த முதல்கட்டமாக அனுமதிக்கப்படுகின்றனர். நபர் ஒருவர் தொழுகை நடத்தி முடிக்க 3 மணிநேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. நாள்தோறும் புனித மெக்கா மசூதி பலமுறை கிருமிநாசினி தெளித்து சுத்திகரிக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் மசூதியில் 5 வேளை தொழுகை நடத்தவும் இன்றுமுதல் அனுமதி்க்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மக்கள் மசூதிக்குள் தொழுகை நடத்தும் முன் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து, தங்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி பெற்று, சமூக விலகலைக் கடைபிடித்து தொழுகை, உம்ரா செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உள்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தினரை குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கவும், போக்குவரத்து வசதிக்காகவும் சிறப்பு செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மசூதி திறக்கப்பட்டதும் முதல் கட்டமாக 50 யாத்ரீகர்கள் காபாவை சுற்றிவரை அனுமதி்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடித்து சுற்றிவந்தனர். முதல்கட்டத்தில் நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ள சவுதி அரேபிய அரசு 2-வது கட்டத்தில் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்வரை சூழலுக்கு ஏற்ப அனுமதிக்க முடிவு செய்துள்ளது. 2-வது கட்டம் வரும் 18-ம் தேதி முதல் தொடங்கும். நவம்பர் மாதத்திலிருந்து வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். சவுதிஅரேபிய அரசு தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால், 3.36 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள், 4,850 பேர் உயிரிழந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.