புனே சர்வதேச திரைப்பட விழாவில் “கட்டில்” திரைப்படம்

மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புது முயற்சி யாக  “கட்டில் திரைப்பட உருவாக்கம்” என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் “கட்டில்” திரைப் படத்திலும் தங்களது பங்களிப்பை தனிச்சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள். இந்த ஆளுமை களின் செயற்பாட்டால் “கட்டில்” எப்படி உருவானது என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கம். கட்டிலில் பயணித்தவர்களின் அனுபவ மொழிகளால் நிரம்பி வழிகிறது இந்த நூல். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம், செம்மலர்அன்னம், ‘மெட்டிஒலி’சாந்தி, ‘காதல்’ கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன்கார்க்கி பாடல் எழுத, சித்ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியுள்ளார். விரைவில் கட்டில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இவ்வாறு கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார். மக்கள் தொடர்பு: சதீஷ்.