பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி

பெண் குழந்தைகளைக் காப்போம் பிரச்சாரத்தில் உ.பி. அரசு ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரச்சாரம் செய்கிறதா என்று உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடி வந்தார். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்குச் சென்ற பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை பாஜக எம்எல்ஏவும், அவரின் மகனும் ஆதரவாளர்களும் சேர்ந்து காவல் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த அந்த குற்றம்சாட்டப்பட்ட நபரை அழைத்துச் சென்றதாக செய்திகள் நாளேடுகளில் வெளியானது. இந்த செய்தியை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைத்து உ.பி. அரசை விமர்சித்துள்ளனர். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ பெண் குழந்தைகளைக் காப்போம் பிரச்சாரம் எப்படி தொடங்கியது. குற்றவாளிகளைக் காப்போம் என்று போய்க்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ பெண் குழந்தைகளைக் காப்போம் அல்லது கிரிமினல்களை பாதுகாப்போம். இதில் எந்தப் பிரச்சாரம், இயக்கம் யாருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று உத்தரப்பிரதேச முதல்வர் கூறுவாரா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஹாத்தரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19வயதுப் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, அந்த பெண்ணை போலீஸார் பெற்றோருக்கு காண்பிக்காமல் எரித்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளின் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.