கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் மீது காவிச்சாயம் பூசி, அவமதிப்பு செய்த மர்மநபர்களின் செயல் விரும்பத்தகாத பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் செயல். தலைவர்களின் சிலைகளை மதிப்புடனும், மரியாதையுடனும் போற்றும் தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலைகளை தொடர்ச்சியாக அவமதித்து பிறரது நம்பிக்கையையும், தனிப்பட்ட கருத்தையும் சிதைக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
வரலாற்று செய்திகளை திரித்து இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை உண்மை என நம்பி சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்துகளை இன்றைய இளைஞர்கள் பகிர்வதால் ஏற்படும் விளைவுகளால் அவர்களின் வாழ்க்கை சீரழிவதை கண்டு நான் மிகவும் வேதனையடைகிறேன். தன்னுடைய கொள்கையே சிறந்தது என கருதி, பிறரின் நம்பிக்கையில் தலையிட்டு அதனை அவமதிக்கும் செயலில் இளைஞர்கள் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இத்தகு செயல்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதை அனைவரும் உணர வேண்டும். மறைந்திருந்து கோழைகளை போன்று பெரியார் சிலையை தொடர்ந்து அவமதிக்கும் செயலில் ஈடுபடு பவர்களை காவல்துறையினர் விரைந்து கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்தால் தான் இனி இது போன்று சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் தவிர்க்க முடியும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.