“நவம்பர் ஸ்டோரி” தொடரில் பணிபுரிந்த அனுபவம் அற்புதமானதாகவும், மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் இருந்தது. அதிலும் மிகப்பெரும் திறமை கொண்ட எழுத்தாளர், இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. “நவம்பர் ஸ்டோரி” தொடருக்கு முன்னதாகவே இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன் அவர்களின் பல திரைக்கதை எழுத்துக்களை படித்து வியந்திருக்கிறேன். மிகச்சிறிய காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்குள் அவர் ஒருங்கிணைத்திருக்கும் தகவல்கள் பிரமிப்பை தரும். முன்னதாக பல வேடங்களுக்கு ஆடிசன் செய்யப்பட்ட நிலையில் இறுதியாக தான் ‘அஹமத்’ பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனக்கு மிகப்பெரும் பெயரை பெற்று தருவதாக இப்பாத்திரம் அமைந்திருக்கிறது.
மூத்த நடிகர் பசுபதி அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறுகையில்..
பல அற்புதமான கதாபாத்திரங்களில் கலக்கிய, அனுபவம் வாய்ந்த நடிகர் பசுபதி அவர்களுடன் பணிபுரிந்தது மறக்க முடியாதது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு நொடியும், சினிமா குறித்து கற்றுக்கொள்ளும் பேரனுபவமாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியிலும், அவர் தந்த சிறு சிறு அறிவுரைகள் இயல்பான நடிப்பை தர பேருதவியாக இருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். சாதாரணமாக இருக்க கூடியவர் கேமரா ஆன் செய்யப்பட்டவுடன் “யேசு” பாத்திரத்திற்குள் உருமாறி புகுந்துகொள்வது பிரமிப்பை தந்தது. ஒளிப்பதிவாளர் விது அயன்னா ஒளியில் மாயாஜால வித்தை தெரிந்த கலைஞன். இதிலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். மிகக்குறுகிய காலத்தில் “ஓ மை கடவுளே, மண்டேலா, நவம்பர் ஸ்டோரி” என தொடர் வெற்றிகள் மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இத்தொடரில் என்னுடன் இணைந்து நடித்த நிஷாந்த், அஷ்ரத்,பூஜிதா, மற்றும் நமீதா ஆகியோர் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார்கள். மொத்த குழுவுமே குடும்ப உறவுகள் போலத்தான் பழகினார்கள். அது தந்த நேர்மறை உணர்வு தொடர் சிறப்பாக வர பேருதவியாக இருந்தது. “நவம்பர் ஸ்டோரி” உங்களுக்கு பிடித்திருப்பது பெரு மகிழ்ச்சி.