பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளான 3.2.2021 புதன்கிழமை காலை 10.30 மணி யளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்களான, கழக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும், கழக மாநிலங்களவைக் குழுத் தலைருமான நவநீதகிருஷ்ணன், கழக நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழு துணைத் தலைவர் பால சுப்பிரமணியன், கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழுச் செயலாளர் விஜயகுமார், முஹம்மத் ஜான், சந்திரசேகரன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.