பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் இன்று வரையிலும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அமைச்சரைவயும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த பரிந்துரையின் பேரில் ஆளுநர் எவ்வித முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இவர்களின் விடுதலை தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எம்.டி.எம்.ஏ., (பல்முனை கண்காணிப்பு முகமை) ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த இறுதி அறிக்கையை இன்னமும் சமர்ப்பிக்காததால் தான் ஆளுநர் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுள்ளதாக நீதிமன்றத்தில் ஒரு காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதற்காக அனுப்பப்பட்ட அமைச்சரவையின் பரிந்துரையின் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 23ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
எனவே, தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்று பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாது உடனடியாக விடுவிக்க தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. என மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.