போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்க்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், 14.9.2019 அன்று காலை, 2 இடங்களில் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) தலைமையில், போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்பேரில், 14.9.2019 அன்று எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில்
நடைபெற்ற, சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த கீழ்ப்பாக்கம் மயிலாப்பூர் திருவல்லிக்கேணி பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா. விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். மேலும், பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பான குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போக்குவரத்து கிழக்கு மாவட்டம் சார்பாக ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற முகாமில் சுமார் 300 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு) திரு.எழிலரசன், இ.கா.ப., அவர்களால் 53 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 15 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மனுக்கள் பொதுவாக விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலை சீரமைத்தல், வேகத்தடை அமைத்தல், போக்குவரத்து காவலர்களை நியமித்தல், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருதல், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்தல், ஆட்டோ நிறுத்தம் இடங்களை வரை முறைப் படுத்துதல், பள்ளி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், ஆகியவற்றை பொருளாக கொண்டிருந்தன. மேற்படி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இம்முகாமில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திரு.எழிலரசன்,இ.கா.ப., கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே போல, போக்குவரத்து தொடர்பாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த (புளியந்தோப்பு, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர்) பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம், திருமங்கலம், எஸ்.எஸ்.மகாலில் போக்குவரத்து இணை ஆணையாளர் (வடக்கு) திருமதி.எம்.வி.ஜெயகௌரி,இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை ஆணையாளர் (மேற்கு) திருமதி.எஸ்.லஷ்மி,இ.கா.ப., போக்குவரத்து உதவி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற முகாமில் சுமார் 125 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (வடக்கு) திருமதி. ஜெய கௌரி, இ.கா.ப., அவர்களிடம் பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் சீரான போக்கு வரத்து உறுதிப்படுத்தவும், வாகன நிறுத்தம் மற்றும் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும், பள்ளி மற்றும் வணிக நிறுவனங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகள் களையவும், சில சந்திப்புகளில் போக்கு வரத்து சிக்னல் அமைக்க வேண்டியும் 30க்கும் மேற்பட்டோர் வாய்மொழியாகவும் 6 பேர் மனுக்கள் மூலமாகவும் தங்கள் குறைகளை தெரிவித்தனர். பொதுமக்களின் குறைகள் மீது சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மேலும் விபத்தில் பலியான சுமார் 10 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு விபத்து வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.