போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம் – சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு சு. வெங்கடேசன் எம் பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம்.

இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி எழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. கல்வெட்டு ஆய்வு இல்லாமல் இந்திய வரலாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. கல்வெட்டுகள் தொடாத வாழ்வின் எந்தவொரு பகுதியும் இல்லை என்கிற நிலையே இன்று இருக்கிறது. இந்திய வரலாறு 98 சதவிகிதம் கல்வெட்டுகள் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. மௌரியர்கள், சத்வகனர்கள், சுங்கர்கள், குஷனர்கள், குப்தர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட வம்சாவழிகள் கல்வெட்டுகள் மூலமாகவே சமகால வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, 1886ல் இந்திய தொல்லியல் துறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட கல்வெட்டு ஆய்வுத் துறை வரலாற்று ஆய்வுக்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. இதுவரை, இந்தியா முழுவதிலும் 80,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. 80,000 கல்வெட்டுகளில் சுமார் 70 சதவிகிதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளில் இருக்கின்றன. மீதி 30 சதவிகிதம் பிற மொழிகள்.  135 வருட பாரம்பரியம் கல்வெட்டு ஆய்வுத் துறைக்கு இருந்தாலும் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 50 சதவிகிதமான கல்வெட்டுகள் மட்டுமே துறை அறிக்கைகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 50 சதவிகிதம் கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. செய்வதற்கு பல வேலைகள் இருந்த போதும் கல்வெட்டு ஆய்வுத் துறை மிக சொற்ப அளவிலான பணியாளர்களுடனேயே இயங்குகிறது. போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தேங்கியிருக்கும் சில முக்கியமான பணிகளை உங்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.
• கல்வெட்டுகளின் காகித பதிவுகள் மோசமான நிலையில் இருப்பதால் 80,000 கல்வெட்டுகளை உடனடியாக கணிணிமயமாக்கும் பணி அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். • இதுவரை பதிப்பிக்கப்படாத 40,000 கல்வெட்டுகளை பதிப்பிக்க முன்னுரிமை தரப்பட வேண்டும். • அகழ்வு மற்றும் சுரங்கப் பணிகளால் காணாமல் போக கூடிய ஆபத்தில் இருக்கும் கல்வெட்டு செல்வத்தை உடனடியாக நகலெடுத்து, பொருள் உணர்ந்து பதிப்பிக்கப்பட வேண்டிய பணி, மிக அவசரமான முன்னுரிமை தரப்படவேண்டும் • கல்வெட்டு ஆய்வைப் பொறுத்தவரையில் பழங்காலவியலாளர்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். திராவிட மொழிகள், பாலி, சமஸ்கிருதம், பிற பிராந்திய மொழிகள் போன்ற பழங்கால மொழிகளிலும், ப்ரம்மி, கரோஷ்டி, அரமைக், கிரேக்கம், சரதா, கௌடி, வட்டலேட்டு, கிரந்தம் போன்ற லிபிக்களிலும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் • சிந்து எழுத்துரு மற்றும் ஷெல் எழுத்துருவிலுள்ள மர்மங்கள் நீக்கப்பட்டு அவை புரிந்து கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் • கல்வெட்டுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து அவற்றை காப்பாற்ற,  கல்வெட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய பண்பாடு விழிப்புணர்வு நிகழ்வுகள் அவ்வபோது நடத்தப்பட வேண்டும். • இன்னும் பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படவும், பொருள் உணரவும் பதிப்பிக்கப்படவும் வேண்டியிருப்பதால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்தது இரண்டு கல்வெட்டு ஆய்வாளர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.  மேற்கண்ட அனைத்து விசயங்களும் துறை ரீதியாக நடக்க வேண்டுமென்றால், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், புதிய பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையில் 758 இடங்களை உருவாக்கும் ஒரு பரிந்துரை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இருப்பதால், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வுக்கென்று குறைந்தது 40 தொழில்நுட்ப பதவிகளை உருவாக்குவதென்பது உங்களுக்கு கடினமான விசயமாக இருக்காது.