டாஸ்மாக் மதுக்கடைகளின் பணியாளர்கள் பல நாட்களாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து வந்தார்கள். அவர்களது கோரிக்கையைக் கேட்கவோ, பேசித் தீர்க்கவோ, டாஸ்மாக் நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முன்வராததால் இன்றிலிருந்து (17.8.2020) தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருபது ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணி புரிந்தும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. டாஸ்மாக் என்பது அரசு சார்ந்த ஒரு நிறுவனமாகும். அரசுப் பணியாளர்களுக்கு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களின் பணியாளர் களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதி கூட இவர்களுக்கு வழங்கவில்லை. இந்த கொரோனா கிருமி தொற்று காலத்தில், தமிழ்நாடு அரசாங்கம் மிகப் பிடிவாதமாக உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று வழக்கு நடத்தி, மதுக் கடைகளைத் திறந்தது. தனிநபர் இடைவெளி மற்றும் கிருமித் தொற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான எந்தப் பாதுகாப்பையும் வலியுறு த்த முடியாத பணிச்சூழலில் வேலை செய்யும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள். அவர்களும் முன்களப் பணியாளர்களே ஆவார். டாஸ்மாக் ஊழியர்கள் கொரோனாவில் பாதிக்க ப்பட்டு மரணம் அடைவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே தமது உயிருக்கும், பணிக்கும், ஊதியத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளார்கள்.
மாநில அரசும் நிர்வாகமும் இதுவரையிலும் பாராமுகம் காட்டி அலட்சியப் படுத்துவதை தமிழ்நாடு ஏஐடியுசி வன்மையாகக் கண்டனம் செய்கிறது. மிகவும் கண்ணியமாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு கேட்காத நிலையில் டாஸ்மாக்கில் இயங்கும் அனைத்து தொழிற்சங்க ங்களும் இணைந்து இரண்டு மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை 25.8.2020 அன்று நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு ஏஐடியுசி தனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக கவனம் செலுத்தி போராடும் ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து காலதாமதம் இல்லாமல் பேசி தீர்வு செய்யுமாறு தமிழ்நாடு ஏஐடியூசி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் டிஎம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.