போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் (ஐஜிஎஸ்டி) போலி ரசீதுகளை கணக்குக் காட்டி ரூ.8.72 கோடி மோசடி செய்த குற்றத்துக்காக டில்லியைச் சேர்ந்த ஒருவரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி உளவுத்துறை தலைமை இயக்குனரகப் பிரிவு கைது செய்துள்ளது. டில்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கசேரா. இவர் எஸ்.கே. டிரேடர்ஸ், ஆர்.கே.என்டர்பிரைசஸ் என்ற இரு நிறுவனங்களை புது டில்லியிலும், ஃபரிதாபாத்திலும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனங்களுக்கு சுஷில் குமார் கோயல் என்பவர் போலி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.கே. டிரேடர்ஸ் நிறுவனம் பெயரில் சரக்கு அனுப்பாமல் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் இந்த ரசீதுகளை கணக்கு காட்டி, ரூ.3.47 கோடியை (ஐடிசி) முறைகேடாக திரும்பப் பெற்றுள்ளார். இதேபோல் போலி ரசீதுகளை கணக்குக் காட்டி ஆர்.கே. என்டர்பிரைசஸ் நிறுவனம் பெயரில் ரூ.5.25 கோடி முறைகேடாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்த ஜிஎஸ்டி உளவுத்துறை தலைமை இயக்குனரகம், டில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தின் பல இடங்களில் விசாரணை நடத்தி ராஜேஷ் கசேராவின் மோசடிகளை உறுதி செய்தது. இவரது இரு நிறுவனங்களின் பெயரில் மொத்த ரூ.8.72 கோடி ஐடிசி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜேஷ் கசேரா டிசம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.