மகிழ்ச்சியளிக்காத பொங்கல் பரிசு – இரா.முத்தரசன்

வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா ரூ.2500 பண்டிகை பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர், அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மக்கள் வரிப் பணத்தில் அறிவிக்கும் அரசுத் திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாக சித்தரிப்பது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில் அஇஅதிமுக தொடர்ந்து மரபுகளை நிராகரித்து வருகிறது. கடந்த மார்ச் 24 முதல் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல், இதனைத் தடுக்க நாடு முடக்கம், ஊரடங்கு உத்தரவுகள் என மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்ட நிலையில், பாதிக்கப் பட்ட மக்களுக்கு குறிப்பாக வருமான வரி எல்லைக்குள் வராத குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ரூ.7500 விதம் ஆறு மாதங்களுக்கு ரொக்கப் பணஉதவி வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. சில போராட்டங்களை முன்னெடுத்தும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அண்மையில் ‘நிவர்’ புயலும், ‘புரெவி’ புயலும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு நடத்திய பேரிடர் தாக்குதலில் பெரும்பகுதி விவசாயிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடி செய்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் “விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும்” என உறுதியளித்தார். ஆனால் இதுவரை பேரிடர் கால நிவாரணம் எதுவும் அறிவிக்கப்பட வில்லை.

இந்த நிலையில் பொங்கல் பரிசாக ரூ.2500 அறிவிக்கப்பட்டிருப்பது எந்தவகையிலும் போதுமானதல்ல. உழவர் தினவிழாவில் கண்ணீர் சிந்தி நிற்கும் விவசாயிகள் கண்ணீர் துடைக்கப்படவில்லை. விவசாயத் தொழிலாளர், கிராமத் தொழிலாளர் குடும்பங்களின் கவலைகளை போக்க முதலமைச்சரின் பரிசுத் தொகை கடுகளவும் உதவாது. இதனைக் கருத்தில் கொண்டு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5000 ரொக்கப் பண உதவியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமும் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்