மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கொடுத்துவி்ட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டம், மறியல் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பிஹார் மாநிலத்தில் 2-வது கட்டத் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டில் உள்ள விவசாயிகள் அதிகமான சந்தைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் விளைபொருட்களை விற்க முடியும் என்கின்றனர். ஆனால், பிரதமரோ அதற்குப் பதிலாக மந்த நிலையைக் கொடுத்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளேட்டில் வெளியான ஒரு செய்தியையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். அதில், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைப் போல் பிஹாரிலும் விளைபொருட்களை விற்க அதிகமான மண்டிகள் தேவை என்று கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவராது. விவசாயத்தைச் சிதைக்கும். இதைத்தான் நாடாளு மன்றத்தில் எடுத்துக் கூறினோம். பிஹாரில் கடந்த 2006-ம் ஆண்டு ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்தது விவசாயிகளுக்கு நன்மை தராது. இதைத்தான் மோடி அரசு நாடு முழுவதும் கொண்டுவர முயல்கிறது. இது சீர்திருத்தம் அல்ல, சிதைப்பு” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மக்களுக்குத் தீபாவளிப் பரிசு எப்போதும் இல்லாத வகையில் விலைவாசி உயர்வு, பணவீக்கம். ஆனால், பாஜக தன்னுடைய முதலாளித்துவ நண்பர்களுக்குத் தீபாவளிப் பரிசாக 6 விமான நிலையங்களைக் கொடுத்துள்ளது. முதலாளிகளுடன் சேர்ந்த முதலாளிகள் வளர்ச்சியை உறுதி செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
லக்னோ விமான நிலையத்தின் பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவில் அதானி குழுமத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா விமர்சித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில் பிரியங்கா காந்தி கூறுகையில், “உருளைக்கிழங்கின் விலை 100 சதவீதம் அதிகரித்துவிட்டது. வெங்காயம் 50 சதவீதம் அதிகரித்துவிட்டது. காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் தங்களுக்குப் போதுமான விலையை விளைபொருட்களுக்குப் பெற முடியாமல், கடன்தான் அதிகரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.