கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்ற நிலையில், பல்வேறு தொழில்கள் முழுமையாக தொடங்கப்படாமல் இருக்கின்றன. மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் போதிய வருவாய் இன்றி கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நிலையில் ஊரடங்கு தளர்வு என்று கூறி திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் (மதுக் கடை) கடைகளை திறப்பது என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேதனைக்குரியது. இதற்கு முந்தைய ஆட்சியில் கொரானா ஊரடங்கின் போது கருப்புச்சட்டை அணிந்து டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வீடுகளின் முன்பு போராட்டம் நடத்திய இன்றைய முதல்வர் ஸ்டாலின் இப்போது ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வேடிக்கையாகவும் இருக்கிறது. எனவே ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று பிஜேபி தெரிவித்துள்ளது.