மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று ஏடுகளில் விளம்பரம் செய்து உள்ளது. இந்திய வரலாறு. தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் உயர்தனிச் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். மத்திய தொல்லியல் துறையின் பட்டப் படிப்புக்கு மட்டும் அன்றி, அதன் பணி இடங்கள் நிரப்பப்படும் போதும் தமிழ் மொழி கல்வித் தகுதி புறக்கணிக்கப்பட்ட விபரம் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது வெட்டவெளிச்சம் ஆகியது.
ஆதிச்சநல்லூர் அகழ்வு ஆராய்ச்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு. கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் 11 ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் கிருபாகரன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “மத்திய அரசின் தொல்லியல் துறைப் பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும்” என்ற கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிட்டது. “தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளன” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தனர். ஐ.நா. மன்றம் வரை தமிழ் மொழியின் சிறப்பைப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகின்றார்; சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டுகின்றார் என்று செய்யப்படுகின்ற வெற்று விளம்பரங்களை நம்பி தமிழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். செம்மொழி தமிழுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தி மொழி திணிப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கல் என்பதைக் கொள்கையாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது. பன்முகத் தன்மை கொண்ட இந்நாட்டில், பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு உரிமையைப் பறித்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கின்ற கோட்பாட்டை வலிந்து செயல்படுத்துவது, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.