மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள்,மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. மா. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்களுக்கிடையேயான ஊடக ஒலிபரப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (Inter Media Publicity Coordination Committee) சென்னை பத்திரிகை தகவல் அலுவலகக்கூடுதல் தலைமை இயக்குநரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான திரு மா. அண்ணாதுரை தலைமையில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் இன்றுநடைபெற்றது. இதில் சென்னை நகர அஞ்சல் கோட்டத் தலைவர் திரு நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் தலைமை இயக்குநர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலம் பல்வேறு மக்கள் தொடர்பு நிகழ்வுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், அரசு நிறுவனங்கள் தங்களைப் பற்றிய சிறு வீடியோ செய்தியை தயாரித்து வெளியிடவும் அவர் அறிவுறுத்தினார். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் சமூகவலைதளங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என அவர் பேசினார். அரசின் ஊடக நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என வலியுறுத்தினார். மேலும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் மக்கள் தொடர்பு கண்காட்சிகள் மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டு வருவதாகவும், அதில் பங்கேற்று மக்கள் நலத்திட்டங்களை ஊரகப் பகுதிகளுக்கும் எடுத்து செல்ல வேண்டுமெனவும் கூடுதல் தலைமை இயக்குநர் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி, கல்பாக்கம் அணுமின் நிலையம், பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு காசநோய்த் தடுப்புப் பிரிவு, பாதுகாப்புத்துறை, சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.