மருத்துவக் கல்வியில் இளங்கலை, முதுகலை, பல்மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய மருத்துவ தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதும், மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்ற மத்திய அரசின் தற்போதைய வாதமும் சமநீதிக்கு புறம்பானதாகும். மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்ட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டில் அதாவது 2017 முதல் 11,027 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் நிரப்பப்படாமல் பொது வகுப்பிற்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.
தமிழகத்தில் தற்போது பிற்படுத்தபட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் BC (Backward Classes) சான்றிதழே பெரும்பாலும் வைத்துள்ளனர். மத்திய அரசு OBC பிரிவினருக்கென 27% இட ஒதுக்கீடு அளித்துள்ளதால், BC சான்றிதழ் கொண்டவர்கள் OBC சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் OBC சான்றிதழ் பெற்றால் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், வருமான உச்சவரம்பு அடிப்படையிலும், சான்றிதழ் செல்லுபடியாகும் கால நிர்ணயம் குறைவாக வைத்தும் பல சிக்கலான வரைமுறையால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான சான்றிதழை பெறுவதில் BC வகுப்பினரை சார்ந்தவர்கள் சிரமப்படுகின்றனர்.
தற்போது ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் இருப்பதற்கு OBC சான்றிதழ் பெற நிர்ணயம் செய்யப்பட்ட முறைகளால் ஏற்பட்ட குழப்பநிலையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் சம்பள வருவாய் மற்றும் விவசாய வருவாயை சேர்க்காமல், தற்போதுள்ள கொள்கையே நீடிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பாரத பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, பிற்படுத்தப் பட்டவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டுத்தர, மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% அதாவது சட்டப்பூர்வ இட ஒதுக்கீட்டுக்கான மொத்தம் 11 ஆயிரத்து 27 இடங்களை சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் நியாயமான முறையில் இடஒதுக்கீடு பகிர்வை உறுதி செய்வதுடன், ஏற்கெனவே ஏற்பட்ட இழப்பிற்கான 11,027 இடங்களும் தவணை முறையில் வரவிருக்கும் கல்வி ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு பிரித்து அளிக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.