புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின், டி ஐ ஈ உலக உச்சி மாநாடு 2020-இல், விசாகப்பட்டினத்தில் இருந்து காணொலி மூலம் பேசிய அவர், புதுமையான வணிக யோசனைகளுடன் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, பல்கலைக்கழகங்கள், தொழில்துறையோடு நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இளைஞர்களிடையே இருக்கும் தொழில் முனைதல் திறனைக் கண்டறியவும், ஊக்குவிக்கவும் வழிகாட்டு மையங்களை அமைக்குமாறு பல்கலைக்கழகங்களை குடியரசுத் துணை தலைவர் கேட்டுக்கொண்டார். பல்கலைக்கழகங்களில் தொழில் முனைதல் சூழலியலுக்கு நிதி உதவி செய்யவும், ஆதரவு அளிக்கவும் முன்வருமாறு தொழில்துறைக்கு திரு நாயுடு வேண்டுகோள் விடுத்தார். வேலை தேடுபவர்களிலிருந்து, வேலையை வழங்குபவர்களாக, இளைஞர்களின் மனநிலை மாற வேண்டும் என்று கூறிய அவர், பெண்களிடையே தொழில் முனைதலை ஊக்குவிப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். தொழில் முனைதல் என்பது லாபங்களை ஈட்டுவது மட்டுமே அல்ல, மக்களின் வாழ்க்கை முறையை சிறப்பாக மாற்றுவதும் தான் என்று குடியரசுத் துணை தலைவர் கூறினார். எதிர்கால தலைமுறையை தங்களது அனுபவத்தின் மூலம் வழிகாட்டுமாறு மூத்த தொழிலதிபர்களுக்கும், தொழில் அமைப்புகளுக்கும் நாயுடு அழைப்பு விடுத்தார்.