மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் 8 எம்.பி.க்கள் இடைநீக்க விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், எந்த விதமான மசோதாக்களையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்தியஅரசு அறிமுகம் செய்தது. அந்த மசோதாக்கள் மீது பல்வேறு திருத்தங்களைச் செய்யக்கோரியும், தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேறியதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார். இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களை கிழிதத்து அவையின் துணைத் தலைவர் மீது எறிய முயன்றனர், பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த சூழலில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர 12 எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடது சாரிகள், திமுக, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ்,ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து மனு அளித்தன. இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவை கூடியதும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது அளித்த நம்பிக்கையில்தாத் தீர்மானத்தை எடுக்க முடியாது என்று தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் “மாநிலங்களவையில் நேற்று மோசமான நாள். அந்த சம்பவங்களைப் பார்த்து வேதனை அடைந்தேன். நாடாளுமன்றத்தின் நன்மதிப்பை, தோற்றத்தை சிதைத்து விட்டீர்கள். பாதுகாவலர்கள் சரியான நேரத்துக்கு வராவிட்டால், துணைத் தலைவருக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்து கவலைப்படுகிறேன். துணைத்தலைவர் மீது நடவடிக்கைஎடுக் 14 நாட்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும் இப்போது தீர்மானத்தை ஏற்க முடியாது. அதேசமயம், அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறம் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்கிறேன்” என உத்தரவிட்டார்.
இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுக்கமிட்டு, உத்தரவை திரும்பப் பெறக் கோரினார்கள். ஆனால், வெங்கய்ய நாயுடு மறுத்து விட்டார். இதையடுத்து கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்திலும் எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணி அளவில் புவனேஷ்வர் கலிதா அவையை நடத்தினார். அப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேறும்படியும், அவையின் மாண்பை பாதுகாக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு மறுத்து அவையிலேயே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அவையை ஒத்திவைப்பதாக புவனேஷ்வர் கலிதா அறிவித்தார்.