திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவரின் நலனுக்காக கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. அதில் இருந்த பாதகமான அம்சங்கள் குறித்து மாற்றுப் பாலினத்தவர் போராடிய பிறகு இந்த ஆண்டு திருத்தங்களுடன் இந்தச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது மாற்றுப்பாலினத்தவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைத்துள்ளது. ஆனால் சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் இவர்கள் சமுதாயத்தில் கண்ணியமாக வாழ்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. எனவே மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனோபாவம் மாறவேண்டியது காலத்தின் கட்டாய மாகும். எனவே அரசு, தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இதற்காகப் பாடுபட வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் து.ரவிக்குமார் கேட்டுக்கொண்டார். புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் விழுப்புரம் & கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய மனித உரிமைகளும் மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளும் என்ற காணொலி கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசியபோது திரு ரவிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள சமத்துவம் நீடித்து நிலைக்க வேண்டுமானால் சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் சமத்துவம் ஏற்பட வேண்டும். நரிக்குறவர் வாரியம், அரவாணிகள் வாரியம் உருவாக்க நான் பாடுபட்டுள்ளேன். பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்படாத சூழல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் மறைமுகமாகத் தொடர்கின்றது. இவற்றை மாற்றி சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் ஏற்பட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம்’ என்று திரு ரவிக்குமார் மேலும் வலியுறுத்தினார். சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.மா.அண்ணதுரை தலைமையுரை ஆற்றினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தன்னளவில் மனித உரிமைகள் பலவற்றை உறுதி செய்கின்றது. சொல்லப் பட்டுள்ள உரிமைகளோடு சொல்லப்படாத மறைமுகமான உரிமைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன. பல்வேறு சூழல்களில் மனித உரிமைகள் மறுக்கப்படும் போதுதான் பிரச்சினை எழுகின்றது. அடுத்தவரின் உரிமைகளை மதிக்கவும் அவற்றை அங்கீகரிக்கவும் செய்தால் சமுதாயத்தில் சமநிலை ஏற்படும். கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் திருமிகு. கோ.அன்பழகி தனது சிறப்புரையில் மாவட்டத்தில் 2008-இல் திருநங்கைகள் நல வாரியம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் 400 மாற்றுப் பாலினத்தவர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 236 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. 150 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் 23 பேருக்கு குடிமைப் பொருள் வழங்கல் (ரேஷன்) அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
திருநங்கைகளுக் கான ஓய்வூதியங்கள் 2019-20 ஆம் ஆண்டில் 36 பேருக்கும் 2020-21 ஆம் ஆண்டில் 51 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.. 84 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் தரப்ப்ட்டுள்ளன. சுய தொழில் தொடங்க முன்பு 20,000 ரூபாய் மானியமாகத் தரப்பட்டது. இப்போது இது 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 பேருக்கு ரூ.20,000 வீதமும் 3 பேருக்கு ரூ.50,000 வீதமும் சுய தொழில் தொடங்க மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று அன்பழகி மேலும் தெரிவித்தார். அறிமுகவுரை ஆற்றிய மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது உரையில் கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கும் பணிகளின் அடிநாதமாக மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது. சுகாதார வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; ஒருவரும் கவனிப்பில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது; புறக்கணிப்பு, கறைப்படுத்தல் எதுவும் இருக்கக் கூடாது; ஊரடங்கு மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மதுரையில் உள்ள மாற்றுப் பாலினத்தவர் களுக்கான ஆதார வள மைய டிரஸ்ட்டி திருமிகு பிரியாபாபு தமிழ்நாட்டில் வரலாற்று ரீதியில் திருநங்கைகள் சமுதாயத்தில் மேன்மையாக நடத்தப்பட்டு வந்ததையும் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட 1871 ஆம் ஆண்டின் குற்றப் பரம்பரையினர் சட்டம் இவர்களைக் கீழ்நிலைக்குத் தள்ளியதையும் பல உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார்.