திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளம் பொத்தையடி சாலையில் பொத்தையடிக்கு வடக்கே சுமார் 1 கி.மீ முன்பாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் 4 அடி உயரத்திற்கு சரிவான நிலையில் இருந்ததால், அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் அந்த மின்கம்பத்தில் மோதி லிங்கத்துரை என்பவர் உயிரிழந்திருப்பதும், பூரணச்சந்திரன் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மனவேதனை அளிக்கிறது. 8 மீட்டர் உயரம் உடைய மின்கம்பத்தை 4.5 அடி ஆழம் தோண்டி நிறுத்தாமல், சுமார் 1.5 அடி ஆழம் தோண்டி தண்ணீர் செல்லும் சிறிய ஓடையின் மீது நிறுத்திய மின்சார ஒப்பந்தத்தாரர், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அரசு விதியின்படி மின்கம்பம் அமைக்காத மின்சார ஒப்பந்தத்தாரர் மீதும், அதனை சரிவர கவனிக்காத மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்விபத்தால் இளம்வயதில் உயிரிழந்த நாங்குநேரி தாலுகா, காத்தநடப்பையைச் சேர்ந்த லிங்கத்துரை என்பவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.