முதலில் விவசாயிகள்; இப்போது தொழிலாளர்களைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு: தொழிலாளர் மசோதா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

முதலில் விவசாயிகளைக் குறிவைத்து, இப்போது தொழிலாளர்களைக் குறிவைக்கிறது மத்திய அரசு என்று தொழிலாளர்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அரசைக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தொழிலாளர் துறை சார்பில் 3 முக்கியச் சீர்திருத்த மசோதாக்களை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவின்படி, 300 தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனங்கள் நிறுவனத்தை மூடும்போது அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. இதற்கு முன் 100 ஊழியர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் மூடப்படுவதாக இருந்தால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். மக்களவையில் இந்த மசோதாக்கள் ஏற்கெனவே நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சிகளின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய மத்திய தொழிலாளர் துறைஅமைச்சர், “வர்த்தகச் சூழலை வெளிப்படைத்தன்மையாக மாற்றுவதற்கு இந்தத் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணைபுரியும். இதன்படி 300 தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனங்கள் கூட இனிமேல் நிறுவனத்தை மூடுவதற்கு முடிவெடுத்தால் அரசின் அனுமதி தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “முதலில் விவசாயிகள் குறிவைக்கப்பட்டார்கள். அடுத்ததாக தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏழைகளைச் சுரண்டி, நண்பர்களை வளர்க்கிறார்கள். இதுதான் மோடிஜியின் ஆட்சி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு தொழிலாளரின் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் பாஜக அரசைப் பாருங்கள். வேலையிலிருந்து தொழிலாளர்களை நீக்குவதை எளிதாக்கும் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. அட்டூழியங்கள் செய்வதை எளிதாக்கியிருக்கிறது மத்திய அரசு” எனத் தெரிவித்துள்ளார்.