முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு செம்மொழி தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் கீழடி போன்ற பல முக்கிய தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அத்துறையில் தமிழைப் புறக்கணித்திருப்பது ஏற்புடையது அல்ல. தமிழர்கள் இத்துறையில் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்பதை இது நிரூப்பிக்கின்றது. எனவே, மொத்தம் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்படும் இந்தப் படிப்பிற்கு கல்வித் தகுதியாக செம்மொழியையும் சேர்த்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என்று  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்