முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை- ஆணவப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள் அந்த நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டுமென சிங்கள அரசை வலியுறுத்துகிறோம். தமிழர்களின் விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலையை உலகமே கண்டித்தது. ஐநா பொது மன்றம் அதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்களை நினைவுகூர்ந்திடும் விதமாக நினைவுத்தூண் ஒன்றைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிறுவினார்கள். யாருக்கும் இடையூறு இல்லாமல் ஒதுக்குப்புறமாகவே அந்த நினைவுத் தூண் நிறுவப்பட்டது. இனவெறி அரசின் வலியுறுத்தலால் அந்த நினைவுத் தூணை அகற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியது. அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று இரவோடு இரவாக ராணுவத்தையும் காவல்துறையையும் பயன்படுத்தி அந்த நினைவுத் தூணை சிங்களப் பேரினவாத அரசு இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது. இனப் படுகொலைகளுக்கு நீதி வழங்காதது மட்டுமின்றி அதை நினைவுகூர்வதற்கும்கூட அனுமதிக்க மாட்டோம் என்று சிங்கள பேரினவாத அரசு கொக்கரிக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவே இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும் ஈழத்தமிழர் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என சிங்கள அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.