இலங்கை உள்நாட்டுபோரின் போது இரக்கமின்றி கொல்லப்பட்ட அப்பாவி தமிழின மக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2019 – இல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக நேற்று தகர்க்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை போர் வடுவையும், தமிழர் அடையாளத்தையும் புள்டோசர் கொண்டு இலங்கை அரசு அழிக்க முடியாது. உலக அளவில் அமைதியை விரும்பி நாடுகள் ஒற்றுமையாக கைகோர்க்கும் சமயத்தில், இலங்கையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் கைது, இருநாட்டு உறவு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட நிலையிலும், இருநாட்டு அமைதி உறவை மீறிய இலங்கை அரசின் அத்துமீறலுக்கு மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தமிழரின் நெஞ்சுரம், வலிமை, உரிமை, உணர்வு, அடையாளம், இன ஒற்றுமை, அண்டை நாட்டு உறவு, உலக அமைதியை மனதில் கொண்டு செய்த தவறை திருத்துங்கள். இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.