புதுதில்லி, ஜூன் 30, 2020. தகவல்களை மறைபொருளாக்குதல் (encrypt) மற்றும் மறைவிலக்குதல் (decrypt) ஆகிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் குறியீடுகளை வழங்குவதே எந்தவொரு தகவல் பரிமாற்ற வழிமுறைகளிலும் பாதுகாப்பான அம்சமாகும். இதுபோன்ற நிலையான பகிர்வு அமைப்புகள் பிரச்சினைகளுக்குக் கணித ரீதியாகத் தீர்வுகாண்பதை அடிப்படையாகக் கொண்டவை. இவை அல்காரித்மிக் முறைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. மேலும், குவாண்டம் கணிப்பொறிகளில் வரும்போதும், அனுப்பும்போதும் புதிய குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. குறியீடுகளைப் பரிமாற்றும் நடைமுறைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்பது, குவாண்டம் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்துவதைப் பொருத்தது. இதில், ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகள் ஏதாவது ஏற்பட்டால், தகவல்களை எளிதில் கண்டறிந்து கொள்ள முடியும். குவாண்டம் குறியீடு பகிர்வு முறையை (Quantum Key Distribution) பயன்படுத்துவதன் மூலம் இதனை சாதிக்க முடியும். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான ராமன் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தனிப்பட்ட மாற்றுரு
மென்பொருள் தொகுப்பை உருவாக்கியுள்ளனர். “qktSim” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பை, குவாண்டம் குறியீடு பகிர்வு முறையில் தொடக்கம் முதல் இறுதிவரை பயன்படுத்த முடியும். இது பல்வேறு தொழில்நுட்ப இணைப்பு முறைகளைப் பயன்படுத்தி பல்வேறுபட்ட நெறிமுறைகளாக மாறும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வை பேராசிரியர் ஊர்பசி சின்கா மற்றும் அவரது தலைமையிலான குழுவினர், கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பார்ரி சேண்டர்ஸுடன் இணைந்து மேற்கொண்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் அடிப்படையிலான பாதுகாப்பான குவாண்டம் தொடர்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான, “செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குவாண்டம் பரிசோதனைகள்” (Quantum Experiments using Satellite Technology (QuEST) என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக இது மேற் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப்பணிகள் குறித்த விவரங்கள் Physical Review Applied (பத்திரிகை) இதழில் இடம்பெற்றுள்ளன.